ஈரான் எச்சரிக்கை விடுத்த நிலையில் இஸ்ரேலுக்கு குண்டுவீச்சு விமானங்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.
பெய்ரூட்,
ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கம் செயல்பட்டு வருகிறது. லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா இயக்கக் ஈரான் ஆதரவு பெற்றதாகும். இதனால், ஹிஸ்புல்லாவினரை குறிவைத்து இஸ்ரேல் நடத்தும் தாக்குதலால் ஈரானும் கோபம் அடைந்துள்ளது. இதனால், கடந்த மாதம் 1-ந் தேதி இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து ஈரானில் உள்ள 20 ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிந்தது.
இதனால் இஸ்ரேல் மற்றும் அதற்கு ஆதரவாக உள்ள அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் உச்சதலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்தநிலையில் பி-52 என்ற குண்டுவீச்சு விமானம் உள்பட ஏராளமான ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கி உள்ளது. இதன்மூலம் ஈரான் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவுகிறது.