Wednesday, November 6, 2024

மாற்றுப் பயிர் சாகுபடிக்கு மகத்தான சாய்ஸ் டிராகன் பழ சாகுபடியில் லாபமீட்டும் விவசாயிகள் மாற்று சாகுபடிக்கு ஏற்ற பயிர்!

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

ஒருமுறை முதலீடு செய்தால் 25 ஆண்டுகள் தொடர்ந்து பலன் தரும் என்று சொல்லக்கூடிய டிராகன் பழ பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வரும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு விவசாயிகள் லட்சக்கணக்கில் லாபம் ஈட்டி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே இக்கரை தத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பழனிசாமி, ராஜ்குமார் ஆகியோர் மாற்றுப் பயிராக டிராகன் பழ பயிர் சாகுபடி செய்துள்ளனர்.

நடவு செய்யப்பட்ட 8 மாதம் முதல் தொடர்ந்து 25 ஆண்டுகள் வரை பலன் தரக்கூடிய கற்றாழை வகையைச் சேர்ந்த பழ பயிராக டிராகன் செடிகள் உள்ளன என்று கூறப்படுகிறது. கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் இருந்து வாங்கி வரப்பட்டு டிராகன் பயிர் நாற்றுக்கள் நடவு செய்யப்படுகின்றன. ஒரு ஏக்கருக்கு 450 கான்கிரீட் போஸ்ட்டுகள் அமைக்கப்பட்டு அதில் ஆயிரத்து 500 செடிகள் சொட்டுநீர் பாசனம் மூலம் நடவு செய்யப்படுகின்றன.

டிராகன் பழ செடிகளை பொருத்தவரை அலீஷ் ஒயிட், ஜம்போ ரெட், இஸ்ரேல் எல்லோ,அமெரிக்கன் வீட் உள்ளிட்ட 150 வகைகள் உள்ளதாகவும், டிராகன் பழத்திற்கு நல்ல விலை கிடைப்பதால் லாபகரமான பயிராக டிராகன் பழ பயிர் உள்ளது என விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

வியாபாரிகள் தோட்டத்திற்கு வந்து பழங்களை பறித்து நல்ல விலைக்கு எடுத்துக் கொள்வதாகவும், ஒரு செடியில் முதலாம் ஆண்டு 8 கிலோ வரை தொடங்கி படிப்படியாக 40 முதல் 50 கிலோ வரை உற்பத்தி கிடைக்கும் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். விவசாய கூலி வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவி வரும் தற்போதைய சூழ்நிலையில் டிராகன் பழ செடிகள் சாகுபடி செய்வதால் பராமரிப்பு பணிகள் குறைந்து குறைந்த அளவு ஆட்களே தேவைப்படும் என பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மற்ற பயிர்களைப் போல அறுவடை முடிந்தவுடன் விவசாய நிலத்தை சுத்தப்படுத்தி மீண்டும் பயிர் சாகுபடி செய்ய வேண்டிய வேலை இல்லை என்றும் பராமரிப்பு செலவும் குறைவு என்பதால் வழக்கமான பயிர் சாகுபடி முறைக்கு பதில் மாற்று பழ பயிராக டிராகன் பழ பயிர் சாகுபடி செய்ய விவசாயிகள் முயற்சிக்கலாம் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024