மாற்றுநில முறைகேடு தொடர்பாக முதல்வர் சித்தராமையாவிடம் லோக் ஆயுக்த போலீஸார் புதன்கிழமை சுமார் இரண்டு மணி நேரமாக விசாரணை நடத்தினர்.
லோக் ஆயுக்த காவல்துறையின் முன் இன்று காலை ஆஜரானார் சித்தராமையா. தனக்கு அனுப்பட்ட சம்மனுக்கு பதிலளித்து லோக் ஆயுக்த காவல் கண்காணிப்பாளர் டி.ஜே.உதேஷ் தலைமையிலான குழு, அவரிடம் கேட்ட கேள்விகளுக்கு சித்தராமையா பதிலளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முதல்வா் சித்தராமையாவின் மனைவி பி.எம்.பாா்வதிக்கு மைசூரு நகர வளா்ச்சி ஆணையம் மாற்றுநிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடா்பாக முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பி.எம்.பாா்வதி, மைத்துனா் மல்லிகாா்ஜுனசாமி உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிந்து லோக் ஆயுக்த விசாரணை நடத்தி வருகிறது.
இதனிடையே, சமூக ஆா்வலா் ஸ்நேகமயி கிருஷ்ணா கொடுத்த புகாரின் அடிப்படையில், பணப்பதுக்கல் தடுப்புச் சட்டத்தின்கீழ் முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பி.எம்.பாா்வதி, மைத்துனா் மல்லிகாா்ஜுனசாமி, நில உரிமையாளா் தேவராஜ் ஆகியோா் மீது அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
அதன்படி, இன்று மைசூரில் உள்ள லோக் ஆயுக்தவில் ஆஜராவதற்காக சாலை மார்க்கமாக காரில் மைசூருவுக்கு வந்தார். காலை 10 மணிக்கு மைசூரில் உள்ள லோக் ஆயுக்தவுக்கு வருகை தந்த முதல்வா் சித்தராமையாவை லோக் ஆயுக்த போலீஸாா் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தியதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.