அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தேர்தல் பணிகளை சீர்குலைக்கும் எண்ணத்தில் பல்வேறு மாகாணங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலையில் தொடங்கி புதன்கிழமை காலை வரையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, புதன்கிழமை காலை 5.30 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை இறுதிகட்டத்தை எட்டி, தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், அமெரிக்க தேர்தலில் முக்கியத்துவம் வாய்ந்த போர்க்கள மாகாணங்கள் என்றழைக்கப்படும் பென்சில்வேனியா, அரிஸோனா, ஜார்ஜியா உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : வெற்றிக்கு அருகில் டிரம்ப்! கமலா தொடர் பின்னடைவு!
இந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்றாலும், சோதனை செய்வதற்காக சில வாக்குச்சாவடிகளில் இருந்து பணியாளர்கள் வெளியாற்றப்பட்டதால், வாக்கு எண்ணிக்கை தாமதமாகியுள்ளது.
ஜார்ஜியா மாகாணத்தில் மட்டும் 177 வாக்குச் சாவடிகளில் 32 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதில், 5 வாக்குச் சாவடிகளில் சோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து அமெரிக்காவின் எஃப்பிஐ வெளியிட்ட செய்தியில், மிரட்டல்கள் ரஷிய மின்னஞ்சல் களங்களில் இருந்து வந்ததாக தெரிவித்துள்ளனர்.