பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, லாரன்ஸ் பிஷ்னோய் படம் பொறித்த டி-சர்ட் விற்பனையை மீஷா நிறுவனம் நிறுத்தியுள்ளது.
கேங்க்ஸ்டர், தி ரியல் ஹீரோ என்பது போன்ற வாசகங்களுடன் லாரன்ஸ் பிஷ்னோயின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும் டி-ஷர்ட்கள் மீஷோ உள்பட இ-வணிகத்தில் ஈடுபட்டு வரும் பிரபல நிறுவனங்கள் விற்பனைக்கான பட்டியலில் இடம்பெற்றிருப்பதைப் பார்த்த சமூக ஆர்வலர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபோன்ற டி-ஷர்ட்கள் குழந்தைகளின் அளவிலும் கூட விற்கப்படுவதை கடந்த இரண்டு நாள்களாக கடுமையாக விமர்சித்து வருகின்றனர்..
இது தொடர்பான ஸ்க்ரீன் ஷாட்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருக்கும் சமூக ஆர்வலர்கள், உலகம் எங்கே சென்றுகொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். இதனை ஆன்லைன் தீவிரவாதமாகவே பார்ப்பதாகவும், அடுத்த தலைமுறைக்கு தவறான விஷயங்கள் எல்லாம் நேரடியாகச் சென்று சேருவதாகவும் கவலை தெரிவித்திருக்கிறார்கள்.
இதையும் படிக்க : வாஷிங்டன், கலிஃபோர்னியாவில் கமலா வெற்றி! அமெரிக்க வாக்கு எண்ணிக்கையில் பரபரப்பு
இந்த நிலையில், லாரன்ஸ் பிஷ்னோய் டி-ஷர்ட் விற்பனையை மீஷோ நிறுவனம் தடை செய்துள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள மீஷோ செய்தித் தொடர்பாளர், எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான விற்பனை தளத்தை வழங்குவதில் உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இதர இ-வணிக செயலிகளில் தொடர்ந்து லாரன்ஸ் பிஷ்னோய் டி-ஷர்ட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு மாநிலங்களில், கொலைச் சம்பவங்களில் தொடர்புடையவராக உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது சிறையில் உள்ளார். பஞ்சாபி பாடகா் சித்து மூஸேவாலா கடந்த 2022-ஆம் ஆண்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களில் லாரன்ஸ் பிஷ்னோயும் ஒருவா். லாரன்ஸ் பிஷ்னோய் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால், சிறைக்குள்ளே இருந்தவாறு அவர் தனது ரௌடி கும்பலை இயக்கி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுபோன்ற ரௌடி கும்பல்களின் சமூக வலைத்தளப் பக்கங்களில், ஏராளமான இளைஞர்களை சேர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு காவல்துறையும் தேசிய புலனாய்வு அமைப்பும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன.
இந்த நிலையில்தான், பிரபல ரௌடி கும்பலின் தலைவராக உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் டி-ஷர்ட்கள் விற்பனைக்கு வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.