அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்பிற்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
வாஷிங்டன்,
அமெரிக்க நாட்டின் புதிய ஜனாதிபதியாக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட கமலா ஹாரிஸை பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற்றுள்ள நிலையில், அவருடைய ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்பிற்கு உலக தலைவர்கள், பிரதமர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் , அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக தேர்வாகி உள்ள டிரம்பிற்கு இஸ்ரேல் பிரதமர் மற்றும் பிரான்ஸ் அதிபர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றது வரலாற்றின் மிகச்சிறந்த கம்பேக். ட்ரம்ப் தலைமையிலான ஆட்சி அமெரிக்காவுக்கு புதிய தொடக்கத்தையும் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான பெரும் கூட்டணிக்கு ஒரு சக்திவாய்ந்த மறுஉறுதியை வழங்குகிறது என்று பதிவிட்டுள்ளார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வெளியிட்டுள்ள பதிவில், தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்பிற்கு வாழ்த்துகள். அமைதி மற்றும் வளத்திற்காக முன்பு நான்கு ஆண்டுகள் இணைந்ததை போன்று மீண்டும் இணைந்து பணியாற்ற தயாராகவுள்ளோம் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.