உலகப் புகழ்பெற்ற பாப் இசைக் கலைஞர் மைக்கேல் ஜாக்சன் பயோபிக்கின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தி ஹாலிவுட் ரிப்போர்டரில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை பிரபல இயக்குநர் அன்டோயின் ஃபுகுவா இயக்கியுள்ளார். ஆவணப் படங்கள் இயக்குவதிலும் பெயர்பெற்றவர். இவரது ஒலிம்பஸ் ஏஸ் ஃபாலன், தி ஈக்குவலைசர் படங்கள் உலகம் முழுவதும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்துக்கு ஜான் லோகன் கதை எழுதியுள்ளார். ஜாஃபர் ஜாக்சன் மைக்கேல் ஜாக்சனாக நடித்துள்ளார்.
இந்தப் படம் முதலில் ஏப்.18,2025இல் வெளியாகவிருந்தது. தற்போது, அக்.3, 2025க்கு மாற்றப்பட்டுள்ளதாக தி ஹாலிவுட் ரிப்போர்டரில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தின் வெளியீட்டுக்காக உலகம் முழுவதும் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கிறார்கள். ஜாஃபர் ஜாக்சன் மைக்கேல் ஜாக்சனின் அண்ணன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் மாதத்துக்கு ரிலீஸ் தள்ளிவைக்க காரணம் போஸ்ட் புரடக்ஷனுக்கு முக்கியத்துவம் அளித்து இன்னமும் படத்தினை மெருகேற்ற இயக்குநர் விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஜிஸ் அன்சாரி இயக்கத்தில் கீனு ரீவ்ஸ் நடிப்பில் குட் ஃபார்சுனேட் படம் அக்.17இல் வெளியாகவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் இந்தப் படம் குறித்து, “நான் வளர்ந்துவரும்போது என்னுடைய வாழ்க்கையில் மைக்கேல் ஜாக்சன் மிகப்பெரிய பங்கு வகிக்கிறார். எனது சினிமாதுறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். மகத்தான கலைஞர், அதேசமயம் அவரும் ஒரு மனிதர்தான். அதைத்தான் நாங்கள் இந்தப் படத்தில் எடுக்க முயற்சித்துள்ளோம். அது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது” என்றார்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கிராஹம் கிங், “ ஜாக்சனின் முழுக் கதையையும் காண்பிக்க நினைப்பதால் மிகப்பெரிய படமாகவே இருக்கும்” என்கிறார். ஜாக்சனின் 30 பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், தயாரிப்பாளர், “இந்தப் படம் ஜாக்சனின் இசை மட்டுமின்றி கலைஞராகவும் மனிதராகவும் அவரது வாழ்க்கையை, திறமையை, போராட்டங்களை, உலகத்தில் அவர் ஏற்படுத்திய தாக்கங்களைக் குறித்து பேசியுள்ளோம்” என்றார்.