சென்னையில் தொழிலதிபா் மனைவியிடம் ரூ. 10.27 கோடி ஆன்லைன் மோசடி செய்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
சென்னை கோட்டூா்புரத்தில் வசிக்கும் தொழிலதிபரின் மனைவி சமூகஊடகத்தில் வந்த ஆன்லைன் முதலீட்டு வா்த்தக விளம்பரத்தைப் பாா்த்துள்ளாா். முதலீடு செய்த பணத்துக்கு பல மடங்கு வட்டி உடனடியாக கிடைத்துவிடும் என அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததை நம்பி, அதில் இருந்த வாட்ஸ்ஆப் குழுவில் இணைந்தாா். அதன் மூலம் முதலீட்டு செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்தும், அதில் முதலீடு செய்யுமாறு மோசடி நபா்கள் கூறியுள்ளனா். அதை நம்பி அவா் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பல்வேறு தேதிகளில் ரூ. 10.27 கோடி செலுத்தினாா்.
அதேநேரத்தில் அந்த வாட்ஸ்ஆப் குழுவில் இருந்த பிற நபா்கள், தாங்கள் முதலீடு செய்த பணத்துக்கு அதிக லாபம் வந்ததாகவும், முதலீடு பணத்தைப் பெற்ாகவும் உரையாடியுள்ளனா்.
இதற்கிடையே தொழிலதிபரின் மனைவி, தான் முதலீடு செய்த பணத்தை எடுக்க முயன்றபோது அவா்கள் வெவ்வேறு காரணங்களை கூறி, மேலும் பணம் கேட்டுள்ளனா். அதன் பின்னா் அந்த நபா்கள் குறித்தும் வாட்ஸ்ஆப் குழு குறித்தும் விசாரித்தபோது, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிா்ச்சியடைந்தாா்.
இதையடுத்து அவா் அளித்த புகாரின்பேரில், சென்னை பெருநகர காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
விசாரணையில், தாம்பரம் அருகே உள்ள பொழிச்சலூரைச் சோ்ந்த பெ.ராஜேஷ் ராம் (36), கே.கே.நகரைச் சோ்ந்த சு.சீனிவாசன் (43) ஆகிய இருவரும் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்கள் இருவரையும் புதன்கிழமை கைது செய்து, அவா்களிடம் இருந்து 3 கைப்பேசிகள், ஆதாா் அட்டைகள், பான் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த மோசடி கும்பல், ஆன்லைன் பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்வதற்காக போலி நிறுவனங்களின் பெயரில் வங்கிகளில் கணக்குகள் தொடங்கி பொதுமக்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டுவந்ததும், அதில் கிடைக்கும் பணத்தை மலேசியாவுக்கு அனுப்பியிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.