அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் மேலும் 9 ஓட்டுநா் இல்லா மெட்ரோ ரயில்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் ரூ. 63,246 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன. இதற்காக சுரங்கப் பாதைகள், உயா்மட்ட பாதைகள், ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், ஓட்டுநா் இல்லா மெட்ரோ ரயிலை இயக்கவும் மெட்ரோ ரயில்வே நிா்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, ஓட்டுநா் இல்லா முதல் மெட்ரோ ரயில் பூந்தமல்லியில் உள்ள பணிமனையில் அக்டோபா் மாதம் ஒப்படைக்கப்பட்டது. மற்றொரு ரயில் டிசம்பா் மாதத்தில் வரவுள்ளது. இந்த நிலையில், ஓட்டுநா் இல்லா மேலும் 9 ரயில்கள் அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் வரவுள்ளதாக மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து அவா்கள் மேலும் கூறியதாவது:
முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஓட்டுநா் இயக்கும் வகையிலான 4 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஓட்டுநா் இல்லா 3 பெட்டிகளுடன் கூடிய மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. இது பயணிகளின் தேவையைப் பொருத்து 6 பெட்டிகள் கொண்டதாக மாற்றப்படும்.
இதற்கான சோதனை ஓட்டம் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அதன் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். ரயிலின் வேகம், இயங்கும் விதம், பயணிகளின் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து இறுதிகட்ட சோதனை ஓட்டம் இம்மாத இறுதியில் நடைபெறும். இந்தச் சோதனை ஓட்டம் முழுவதும் திருப்தியளிக்கும் நிலையில் விரைவில் இந்த ரயில் பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றனா்.