2027 ஆம் ஆண்டு வரை ஐபிஎல்லில் விளையாட இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸுக்கு தடை விதிக்கப்படவுள்ளது.
இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சர்வதேசப் போட்டிகளில் கவனம் செலுத்துவதால் தன்னால் ஐபிஎல்லில் பங்கேற்க முடியாது என்று தெரிவித்திருந்தார்.
2025 ஆம் ஆண்டுக்காக ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலம் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜெட்டா நகரத்தில் நவம்பர் மாத இறுதியில் நடைபெறுகின்றது. இதில், இதுவரை 1,574 வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இந்தப் பட்டியலில் இங்கிலாந்து மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், இத்தாலிய வேகப்பந்து வீச்சாளர் தாமஸ் டிராகா மற்றும் இந்தியாவில் பிறந்த அமெரிக்க வேகப்பந்து வீச்சாளர் சவுரப் நேத்ரவல்கர் ஆகியோர் நவம்பர் 24 ஆம் தேதி ஜெட்டாவில் நடைபெறும் ஐபிஎல் மெகா ஏலத்தில் பதிவு செய்துள்ளனர்.
மெகா ஏலத்துக்கானப் பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஆர்.அஷ்வின் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் அவர்களது அணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் தலா ரூ.2 கோடி அடிப்படை விலையில் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, கடந்த நவம்பரில் இருந்து பல்வேறு காயங்களால் விலகி இருந்தார். மேலும் அவரது முன்னாள் அணியான குஜராத் டைட்டன்ஸால் விடுவிக்கப்பட்டார். அவரும், இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கும் ரூ.2 கோடி அடைப்படை விலையாக நிர்ணயம் செய்துள்ளனர்.
அதிகபட்ச அடிப்படை விலையான ரூ.2 கோடியுடன் பட்டியலில் உள்ள மற்ற இந்திய வீரர்களில் கலீல் அகமது, முகேஷ் குமார், வெங்கடேஷ் ஐயர், அவேஷ் கான், தீபக் சாஹர், இஷான் கிஷன் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தப் பட்டியலில் ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், தேவ்தத் படிக்கல், க்ருனால் பாண்டியா, ஹர்ஷல் படேல், பிரசித் கிருஷ்ணா, நடராஜன், வாஷிங்டன் சுந்தர் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோரும் உள்ளனர்.
பணிச்சுமையாலும், உடற்தகுதியில் கவனம் செலுத்துவதற்கும் ஐபிஎல்லின் கடைசி சீசனைத் தவறவிட முடிவு செய்த ஸ்டோக்ஸ், 2025-ஆம் ஆண்டுக்கான தொடரிலும் விலகுவதாக தெரிவித்துள்ளார். பென் ஸ்டோக்ஸ் மெகா ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்யவில்லை.
இதனால் அவரால் அடுத்த 3 ஆண்டுகள் ஐபிஎல்லில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 2027 ஆம் ஆண்டு வரை ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாது. ஏனென்றால் ஐபிஎல் விதிகளின்படி மெகா ஏலத்தில் பங்கேற்கவில்லை என்றால், அந்த வெளிநாட்டு வீரர் மினி ஏலத்தில் பங்கேற்பதில் இருந்து 2 ஆண்டுகளுக்கு தடை செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.