சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் மூலவர் சுவாமிநாத சுவாமி தங்க கவசம் வைரவேல் வைர கிரீடத்துடன் காட்சி கொடுத்தார். காலை முதல் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
தமிழ் கடவுள் எனப் போற்றப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அமைந்துள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 2ஆம் தேதி தொடங்கியது.
விழாவினை முன்னிட்டு மலைக் கோயிலிலிருந்து நவ வீரர்களுடன் முருகப்பெருமான் கீழ் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தினமும் சுவாமி வீதி உலா நடைபெற்ற நிலையில், இன்று கந்த சஷ்டியையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவர் சாமிநாத சாமிக்கு மஞ்சள் பொடி, மா பொடி, பால், தயிர், சந்தனம் என பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து தங்க கவசம் வைர கிரீடம் வைரவேல் சிறப்பு மலர் அலங்காரத்தில் காட்சிகொடுத்த மூலவர் சுவாமிநாத சாமியை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.