இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த நியூசிலாந்து அணி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதன் வெற்றியைத் தொடருமா என்ற எதிர்பார்ப்பு நியூசிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற நவம்பர் 28 ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்குகிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் முறையே டிசம்பர் 6 மற்றும் டிசம்பர் 14 ஆகிய தேதிகளில் தொடங்குகின்றன.
இதையும் படிக்க: ஐபிஎல் தொடரில் விளையாட ஜேம்ஸ் ஆண்டர்சன் திடீரென ஆர்வம் காட்ட காரணம் என்ன?
வெற்றிநடை தொடருமா?
இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் அதிரடியான அணுகுமுறையை (பேஸ்பால் யுக்தி) பயன்படுத்தி வருகிறது. இங்கிலாந்தின் யுக்தி அந்த அணிக்கு குறிப்பிடத்தக்க அளவில் கைகொடுத்தாலும், அண்மையில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது. பாகிஸ்தானுடனான தொடரை இழந்து நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதால், இங்கிலாந்து அணி எவ்வாறு செயல்படப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்விக்குப் பிறகு, இந்திய அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் அண்மையில் பெற்ற வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றி நியூசிலாந்துக்கு மிகுந்த நம்பிக்கையளித்துள்ளது. நியூசிலாந்து அணி அதே உத்வேகத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.
இதையும் படிக்க: இந்தியா மோசமான அணியாக மாறிவிடவில்லை: நியூசி. கேப்டன்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களுக்குள் முன்னேற, நியூசிலாந்து அணிக்கு இந்த டெஸ்ட் தொடர் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றியின் காரணமாக, நியூசிலாந்து அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 4-வது இடத்துக்கு முன்னேறியது.
இங்கிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ளது. முதல் மூன்று இடங்களில் ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிக்க: கேப்டனுடன் வாக்குவாதம்: மைதானத்தைவிட்டு வெளியேறிய மே.இ.தீவுகள் பந்துவீச்சாளர்!
இங்கிலாந்தின் பேஸ் பால் யுக்தி நியூசிலாந்தின் வெற்றிப் பயணத்துக்கு முட்டுக்கட்டைப் போடுமா? அல்லது இந்தியாவுக்கு எதிரான வெற்றிநடையை இங்கிலாந்துக்கு எதிராகவும் நியூசிலாந்து அணி தொடருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.