திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த (நவ. 2) சனிக்கிழமை காலை யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு நாள்தோறும் அதிகாலையில் கோயில் நடைதிறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன.
இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு திருக்கோயில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது.
அதிகாலை முதலே பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமியை தரிசனம் செய்தனர். அதன்பின் காலை 6 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் எழுந்தருளினார். அங்கு பூஜைகளாக, மதியம் மூலவரான சுப்பிரமணியருக்கு சஷ்டி சிறப்பு தீபாராதனையும், உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றது.
அதன்பின் யாகசாலையில் இருந்த ஜெயந்திநாதருக்கு சிறப்பு தீபாராதனையாகி சுவாமி அம்பாளுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி சண்முகவிலாசம் வந்தார்.
அதன்பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் திருவாவடுதுறை ஆதீன கந்த சஷ்டி மண்டபத்திற்கு வந்து, அங்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி திருக்கோயிலில் வேல்பூஜை நடைபெற்று மாலை தங்கமயில் வாகனத்தில் சூரசம்ஹாரத்திற்கு புறப்பட்டார்.
சூரபத்மன் தனது பரிவாரங்களுடன் சிவன் கோயிலிலிருந்து புறப்பட்டு உள், வெளி மாடவீதிகள் மற்றும் ரதவீதிகள், சன்னதி தெரு வழியாக திருக்கோயில் கடற்கரைக்கு வந்து சேர்ந்தார். விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.