Friday, November 8, 2024

திருப்பரங்குன்றம் தேரோட்டம்.. தங்க மயில் வாகனத்தில் வீற்றிருந்து அருள்பாலித்த முருகப்பெருமான்

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

காப்பு கட்டி விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'அரோகரா' முழக்கமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருப்பரங்குன்றம்:

முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 2-ம் தேதி தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் காலையிலும், மாலையிலும் சண்முகர் சன்னதியில் சண்முகர் வள்ளி தெய்வானைக்கு சண்முகார்ச்சனைகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் முருகப்பெருமான் வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து நேற்று மாலை 6 மணி அளவில் சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹார லீலை நடைபெற்றது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூரசம்கார லீலையை கண்டுகளித்தனர். அதன்பின்னர் கோவிலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. இதையடுத்து பூ சப்பரத்தில் எழுந்தருளி சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் நிறைவு நாளான இன்று காலையில் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பால், சந்தனம், திரவிய பொடி உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் அமர்ந்தபடி சிறிய சட்டத்தேரில் எழுந்தருளினார். காப்பு கட்டி விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'அரோகரா' முழக்கமிட்டபடி தேரை வடம் பிடித்து கிரிவலப் பாதை வழியாக இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

இன்று மாலை 3 மணி அளவில் பாவாடை தரிசனமும் அதனைத் தொடர்ந்து மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கவச அலங்காரமும் நடைபெறுகிறது. காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் அதிகாலையில் மாவிளக்கு எடுத்து தங்களது கந்த சஷ்டி விரதத்தை நிறைவு செய்தனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024