ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே ஜோகட்டி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 40), கூலி தொழிலாளி. இவருக்கு ரத்தினம்மா என்ற மனைவியும், நாகேஷ் நவீன் ஆகிய 2 மகன்களும் இருந்தனர். நாகேஷ் 10-ம் வகுப்பு படித்து விட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு செல்கிறார். நவீன் அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.
நாகராஜ் நேற்று தன்னுடைய மனைவி ரத்தினம்மா, இளைய மகன் நவீன் ஆகியோருடன் முத்துராயன்தொட்டியில் உள்ள முத்தப்பா சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய மோட்டார் சைக்கிளில் சென்றார். நெல்லுமார் அக்ரஹாரம் கிராமத்தில் இருந்து அன்னேமார் தொட்டி கிராமத்துக்கு செல்லும் வழியில் வனப்பகுதியில் சென்ற போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
இதில் நாகராஜ், அவருடைய மனைவி, மகன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ஒரே குடும்பத்தில் 3 பேர் பலியான சோகம் ஜோகட்டி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.