Friday, November 8, 2024

பேராசிரியர் மா.செல்வராசனுக்கு கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

2024-ஆம் ஆண்டிற்கான கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதினை சென்னை பல்கலைக்கழக முன்னாள் தமிழ் பேராசிரியர் முனைவர் மா. செல்வராசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில்,2024 ஆம் ஆண்டிற்கான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதிற்குத் தேர்வு செய்யப்பட்ட சென்னைப் பல்கலைக்கழக மேனாள் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் மா. செல்வராசனுக்கு கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுடன் ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும், வெண்கலத்தாலான கலைஞர் மு. கருணாநிதி திருவுருவச்சிலையும் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பித்தார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெருமுயற்சியால் இந்தியாவில் முதன்முறையாகத் தமிழ் மொழியானது 2004-ஆம் ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. செம்மொழித் தமிழுக்கெனத் தனித்தன்மையுடன் ஒரு நிறுவனம் தொடங்கப்பட வேண்டும் என்ற முத்தமிழறிஞர் கனவினை நிறைவேற்ற, மத்திய அரசினைத் தொடர்ந்து வலியுறுத்தியதின் அடிப்படையில், 2006-இல் இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனத்தின் ஓர் அங்கமாக இந்நிறுவனம் அமைக்கப்பட்டது. பின்னர் 2008-ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் எனத் தன்னாட்சி பெற்ற நிறுவனமாகச் சென்னையில் அமைக்கப்பட்டது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவர் முதல்வர் ஆவார்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முக்கியத்துவம் கருதி முத்தமிழறிஞர் கலைஞர் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் 24.7.2008 இல் தனது சொந்த நிதி ரூ.1 கோடியை வைப்புத் தொகையாக அளித்து ‘கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழாய்வு அறக்கட்டளை’யை நிறுவினார்.

இதையும் படிக்க |திருப்பதிக்கு தனி மாநில அந்தஸ்து கோரிய மனு தள்ளுபடி!

அறக்கட்டளையின் மூலமாக ஆண்டுதோறும் ‘கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது’ வழங்கப்படுகிறது. இந்த விருது இந்தியாவிலேயே மிக உயரிய வகையில் ரூ. 10 லட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும், கலைஞர் மு. கருணாநிதி திருவுருவச்சிலையும் அடங்கியதாகும்.

தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப்பிலக்கியம், இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நுண்கலைகள் ஆகிய துறைகளில் செம்மொழித் தமிழாய்வுக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள அறிஞர் ஒருவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

அறக்கட்டளை தொடங்கப்பட்டபின் 2009 ஆம் ஆண்டிற்கான முதல் விருது பின்லாந்து நாட்டு அறிஞர் பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலாவுக்கு 2010, ஜூன் 23 கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அன்றைய குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே. ராஜாராமன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ஔவை. ந. அருள், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன துணைத் தலைவர் பேராசிரியர் மருத்துவர் சுதா சேஷய்யன், இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன், பதிவாளர் முனைவர் ரெ. புவனேஸ்வரி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024