Saturday, September 21, 2024

பா.ஜ.க.வுக்கு எதிரான மன நிலையை முதல்-அமைச்சர் மாற்றிக் கொள்ள வேண்டும் – வானதி சீனிவாசன்

by rajtamil
0 comment 22 views
A+A-
Reset

தமிழகத்தில் மக்கள் விரும்பக்கூடிய கட்சியாக பா.ஜ.க. உள்ளது என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

கோவை,

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன் கூறியதாவது:-

கோவை நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க.வுக்கு அதிகமான வாக்குகளை மக்கள் அளித்துள்ளனர். மாநில தலைவர் அண்ணாமலை மிகப்பெரிய எழுச்சியை கொடுத்துள்ளார். கூட்டணி இல்லாமல் அவர் அதிகமான வாக்குகள் பெற்று மக்கள் ஆதரவை பெற்றுள்ளார். இதற்காக மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் பா.ஜ.க.வை பொறுத்தவரை மக்களுக்கு பணி செய்வதைத்தான் கடமையாக கொண்டு செயல்படும்.

பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார். அவர் கடந்த 10 ஆண்டுகளில் ஏழை, எளிய பெண்கள், விவசாயிகள், பட்டியலின மக்களின் நலனுக்காக எப்படி உழைத்தாரோ, அதை விட கூடுதலாக பணியாற்றுவார். கோவையில் நடந்த முப்பெரும் விழாவில் பேசியவர்கள் தமிழகத்தில் மீண்டும் 2026-ல் ஆட்சியை பிடிப்பதாக கனவு கண்டு வருகின்றனர். நாங்கள் 40 இடத்தை பிடித்து விட்டோம், நாடாளுமன்றத்தில் பாருங்கள் என கூறுவதால் வாக்களித்த மக்களுக்கு நன்மை செய்ய முடியாது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பா.ஜ.க.வுக்கு எதிரான மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் மக்கள் விரும்பக்கூடிய கட்சியாக பா.ஜ.க. உள்ளது. தென்னிந்தியாவில் ஏற்கனவே காலை பதித்து விட்டோம். தமிழகத்தில் ஆழமாக பதிந்துள்ளது. அதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் கோடிக்கணக்கான திட்டங்களோடு வருகிறார். ஆனால் தமிழக அரசின் மின் கட்டண, பத்திரப்பதிவு உள்ளிட்ட விலை உயர்வால் தொழில்துறையினர் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் அதிக வாக்குகளை மக்கள் அளித்துள்ளனர். இனி சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தி வியூகங்களை வகுத்து பணிகளை தொடங்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024