Saturday, September 21, 2024

பஸ் உரசியதில் கவிழ்ந்த முட்டை லாரி; சிதறிய முட்டைகளை போட்டி போட்டு அள்ளிச்சென்ற மக்கள்

by rajtamil
0 comment 24 views
A+A-
Reset

உடையாமல் கிடந்த முட்டைகளை பொதுமக்கள் போட்டிபோட்டு அள்ளிச்சென்றனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள தனியார் கறிக்கோழி உற்பத்தி நிறுவனத்திற்கு பல்லடம் – தாராபுரம் ரோட்டில் உள்ள நந்தவனப்பாளையத்தில் இருந்து முட்டைகள் வினியோகம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி நேற்று வழக்கம்போல் நந்தவனப்பாளையத்தில் இருந்து முட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று பல்லடம்- தாராபுரம் ரோட்டில் கள்ளகிணறு பகுதியில் வந்து கொண்டிருந்தது.

அப்போது முட்டை லாரிக்கு பின்னால் ராஜபாளையத்தில் இருந்து கோவை செல்லும் அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் முட்டை லாரியை முந்திச்செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக முட்டை லாரி மீது அரசு பஸ் உரசியதாக கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறி முட்டை லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் இருந்த முட்டைகள் ரோட்டில் சிதறி விழுந்து உடைந்தன. இதனால் சாலை முழுவதும் முட்டைகளாக கிடந்தன. முட்டைகள் உடைந்து அதில் இருந்த வெள்ளை, மஞ்சள் கருக்கள் ஆறாக ஓடியது. இந்த விபத்தில் லேசான காயங்களுடன் முட்டை லாரி டிரைவர் உயிர் தப்பினார். மேலும் உடையாமல் கிடந்த முட்டைகளை பொதுமக்கள் போட்டிபோட்டு அள்ளி சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான சுமார் 25 ஆயிரம் முட்டைகள் உடைந்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

You may also like

© RajTamil Network – 2024