விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு எதற்கு நிதி? – பிரேமலதா கேள்வி

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் சுற்றுவட்டார பகுதியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில், கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்ற தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த, விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு அவர் ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:-

போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று தி.மு.க. முன்பு பேசியது என்ன ஆனது? 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் இதுவரை முதல்-அமைச்சர் வந்து பார்க்கவில்லை. டாஸ்மாக், கஞ்சா அதிகம் இருக்கும் நிலையில் தற்போது கள்ளச்சாராயமும் இருப்பது வேதனை. விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி கொடுப்பது தவறானது. நிதி கொடுப்பது விஷ சாராயம் அருந்துபவர்களை ஊக்குவிப்பது போல் உள்ளது. விஷ சாராயத்தை ஒழிக்க வேண்டுமே தவிர அதை அருந்தியவர்களுக்கு நிதி தரக்கூடாது.

சாராய வியாபாரிகளுடன் அரசு கைகோர்த்துக்கொண்டு செயல்படுகிறது. அதிகாரிகளை மாற்றுவதால் தீர்வு கிடைத்து விடாது. இனி இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அரசின் கடமை. தமிழ்நாட்டில் வெறும் தேர்தல் அரசியல் மட்டும் தான் நடக்கிறது. அடுத்த தேர்தலை நோக்கி தான் அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன; மக்களை பற்றி சிந்திக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024