Saturday, September 21, 2024

மத்திய அரசு அறிவித்துள்ள நெல் கொள்முதல் விலை போதுமானதல்ல – அன்புமணி ராமதாஸ்

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

2024-25-ம் ஆண்டில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.117 உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இதன் மூலம் சாதாரண ரக நெல்லுக்கான கொள்முதல் விலை 2,183 ரூபாயிலிருந்து 2,300 ரூபாயாகவும், சன்ன ரக நெல்லுக்கான கொள்முதல் விலை 2,203 ரூபாயிலிருந்து ரூ.2,320 ஆகவும் உயர்ந்திருக்கிறது. இது கணிசமான உயர்வு தான் என்றாலும் கூட வேளாண் உற்பத்திச் செலவுடன் ஒப்பிடும் போது இது போதுமானது அல்ல.

ஒரு குவிண்டால் நெல்லுக்கான உற்பத்திச் செலவு ரூ.2,017 ஆக மதிப்பிடப்பட்டிருக்கிறது. எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைப்படி 50% லாபமாக ரூ.1,009 சேர்த்து ஒரு குவிண்டாலுக்கான கொள்முதல் விலையாக ரூ.3,026 நிர்ணயிக்கப்பட்டிருந்தால் உழவர்கள் ஓரளவாவது மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். ஆனால், வேளாண் விளைபொருட்களுக்கான உற்பத்தி செலவுகளை கணக்கிடுவதற்காக மத்திய அரசு கடைபிடிக்கும் வழிமுறையில் உள்ள குளறுபடிகள் காரணமாக நெல்லுக்கான உற்பத்திச் செலவு குறைவாகவே மதிப்பிடப்படுகிறது. அதனால் கொள்முதல் விலையும் குறைகிறது. இது தான் உழவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மத்திய அரசால் நிர்ணயிக்கப்படும் நெல் கொள்முதல் விலை போதுமான அளவில் இல்லை எனும் போது, அதை ஈடு செய்யும் வகையில் தமிழக அரசு தான் கூடுதல் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். ஆனால், தமிழக அரசோ எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத வகையில் சாதாரண நெல்லுக்கு, 82 ரூபாய், சன்ன ரக நெல்லுக்கு, 107 ரூபாயை கடந்த ஆண்டுக்கான ஊக்கத்தொகையாக அறிவித்தது. நடப்பாண்டிலும் இதே அளவில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டால் நெல்லுக்கான கொள்முதல் விலை ரூ.2,500-க்கூட தாண்டாது. இது உழவர்களுக்கு போதுமானதாக இருக்காது.

ஒடிசாவில் புதிதாக பதவியேற்றுள்ள பாரதிய ஜனதா அரசு, அதன் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஒரு குவிண்டால் நெல்லுக்கான கொள்முதல் விலையை ரூ.3,100 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு எந்த நேரமும் வரக்கூடும். இதற்கான மத்திய அரசின் கொள்முதல் விலையான 2,300 ரூபாயுடன் ரூ.800 ஊக்கத்தொகை சேர்த்து வழங்கவுள்ளது. இதற்கு முன்பாகவே தெலுங்கானா மாநில அரசுக்கு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.500 ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்திருக்கிறது. உழவர்களின் நிலையை அறிந்து அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் இந்த மாநில அரசுகளின் நடவடிக்கை பாராட்டத்தக்கது.

ஒடிசா மாநில அரசிடமிருந்து தமிழக அரசும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். ஒடிசா மாநில அரசு வழங்கவிருப்பதைப் போல குவிண்டாலுக்கு ரூ.800 ஊக்கத்தொகை வழங்க வேண்டும். அத்துடன் சேர்த்து ஒரு குவிண்டால் சாதாரண ரக நெல்லுக்குரூ.3,100, சன்னரக நெல்லுக்கு ரூ.3,120 கொள்முதல் விலையாக வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு அறிவித்துள்ள நெல் கொள்முதல் விலை
குவிண்டாலுக்கு ரூ.2320 போதுமானதல்ல: குவிண்டாலுக்கு
தமிழக அரசு ரூ.800 ஊக்கத்தொகையாக வழங்க வேண்டும்!
2024-25ஆம் ஆண்டில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.117 உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்…

— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) June 20, 2024

You may also like

© RajTamil Network – 2024