Friday, September 20, 2024

தீ விபத்தில் சிக்கி 46 இந்தியர்கள் உள்பட 50 பேர் பலி: இழப்பீடு அறிவித்த குவைத் அரசு

by rajtamil
0 comment 25 views
A+A-
Reset

அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான 50 பேரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என குவைத் அரசு அறிவித்துள்ளது.

துபாய்,

குவைத்தில் இயங்கி வரும் பிரபலமான என்.பி.டி.சி. என்ற நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

6 மாடிகளை கொண்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 200 பேர் தங்கியிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவர். அதிலும் குறிப்பாக கேரளா, தமிழ்நாடு போன்ற தென்னிந்தியாவை சேர்ந்தவர்களே அதிகம்.

இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி அதிகாலையில் இந்த அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் உள்ள காவலர் அறையில் மின்கசிவு ஏற்பட்டு தீப்படித்தது. மளமளவென பற்றி எரிந்த தீ அடுத்தடுத்த தளங்களுக்கும் வேகமாக பரவியது.

இந்த பயங்கர விபத்தில் தீயின் கோரப்பிடியில் சிக்கி 50 பேர் பலியாகினர். அவர்களில் 46 பேர் இந்தியர்கள் ஆவர். 3 பேர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள். எஞ்சிய ஒருவரின் உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. தீ விபத்தில் பலியான 46 இந்தியர்களில் 24 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள், 7 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே குவைத் தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்கள் விமானம் மூலம் தாயகம் கொண்டுவரபட்டு அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு இறுதி சடங்குகள் நடந்தன. இந்த நிலையில் மங்காப் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் பலியான 50 பேரின் குடும்பங்களுக்கு தலா 15,000 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.12½ லட்சம்) இழப்பீடு வழங்கப்படும் என குவைத் அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "குவைத் மன்னர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் உத்தரவின் பேரில், தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 15,000 அமெரிக்க டாலர்கள் (ரூ.12½ லட்சம்) இழப்பீடு வழங்கப்படுகிறது.

இந்த இழப்பீட்டுத் தொகைகள் தூதரகங்கள் வாயிலாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு போய் சேரும். சம்பந்தப்பட்ட தூதரகங்கள் தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி விரைவாகவும், முறையாகவும் சென்றடைவதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்த இக்கட்டான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை ஆதரிப்பதே இந்த நிதி உதவியின் நோக்கம்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக தீ விபத்தில் பலியான இந்தியர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதேபோல் தீ விபத்தில் உயிரிழந்த தங்கள் மாநிலத்தை சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக கேரள அரசும், தமிழக அரசும் தனித்தனியே அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024