அவரை போன்ற வீரர் கிடைப்பதற்கு இந்தியா அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் – முகமது கைப் பாராட்டு

by rajtamil
0 comment 22 views
A+A-
Reset

கடந்த டி20 உலகக்கோப்பையில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடாததற்காக இங்கிலாந்து போன்ற எதிரணிகள் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று முகமது கைப் தெரிவித்துள்ளார்.

பார்படாஸ்,

டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 53 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 32 ரன்களும் அடித்தனர்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 134 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றை நம்பிக்கையுடன் தொடங்கி உள்ளது.

இந்திய தரப்பில் பும்ரா 4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். மற்ற பவுலர்கள் அர்ஷ்தீப்சிங் 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இந்நிலையில் கடந்த டி20 உலகக்கோப்பையில் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் விளையாடாததற்காக இங்கிலாந்து போன்ற எதிரணிகள் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று முகமது கைப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியுள்ளது பின்வருமாறு:-

"2022 டி20 உலகக் கோப்பையில் பும்ரா இல்லை என்பதற்காக இந்தியாவின் எதிரணிகள் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஜோஸ் பட்லர்- அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடியால் இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது. அதன் பின் காயத்திலிருந்து கம்பேக் கொடுத்த பும்ரா 2023 உலகக் கோப்பையில் விளையாடினார். அத்தொடரில் இந்தியா பைனல் வரை சென்றது.

இந்தத் தொடரிலும் நியூயார்க் மைதானத்தில் விக்கெட்டுகளை எடுத்த அவர் இப்போட்டியில் ஸ்விங் இல்லாத ஸ்லோவான பிட்ச்சில் ஸ்லோ மற்றும் கட்டர் பந்துகளை பயன்படுத்தி பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கினார். அவரை அடிப்பதற்காக குர்பாஸ் நகர்ந்து சென்றார். ஆனால் அப்போது ஆக்சனை மாற்றாத பும்ரா மெதுவான பந்தை வீசினார். அதை சந்திக்க சென்ற குர்பாஸ் நன்றாக விளையாடாமல் ஆட்டமிழந்தார்.

அந்த வகையில் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் பந்து வீசும் கலை பும்ராவிடம் இருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வேகத்துக்கு சாதகமான சூழ்நிலையில் பாபர் அசாமை அவுட்டாக்கி ரிஸ்வானை கிளீன் போல்ட்டாக்கிய அவர் இப்திகாரை யார்க்கர் பந்தால் காலி செய்தார். எனவே அவர் வித்தியாசமாக பவுலிங் செய்கிறார். பும்ராவை போன்ற பவுலர் உங்களுக்கு கிடைக்க மாட்டார். அவரைப் போன்றவர் கிடைத்ததற்கு இந்தியர்கள் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். இந்தியா உலகக்கோப்பை வெல்வதில் அவர் முக்கிய பங்காற்றுவார். நன்றி பும்ரா" என்று பாராட்டியுள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024