Saturday, September 21, 2024

சுவிஸ் வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் பணம் ரூ,9,771 கோடியாக சரிவு

by rajtamil
0 comment 22 views
A+A-
Reset

சுவிஸ் வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் பணம் 4 ஆண்டுகளில் இல்லாத அளவாக ரூ,9,771 கோடியாக சரிந்து உள்ளது.

சூரிச்,

சுவிட்சர்லாந்தில் உள்ள பல்வேறு வங்கிகளில் ஏராளமான இந்திய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் கோடிக்கணக்கான நிதியை பதுக்கி வைத்துள்ளனர். இந்த கணக்கு மற்றும் தொகை விவரங்களை சுவிட்சர்லாந்து தேசிய வங்கி அவ்வப்போது இந்தியாவுடன் பகிர்ந்து வருகிறது. இந்தியாவின் வரி ஏய்ப்புக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் இந்த விவரங்களை வழங்கி வருகிறது. இதில் கடந்த ஆண்டு நிலவரப்படி சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் பணம் குறித்த விவரங்கள் தற்போது வழங்கப்பட்டு உள்ளன.

இதில் தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்தியர்களின் பணம் இருப்பு சரிந்திருப்பதாக கூறப்பட்டு உள்ளது.அதன்படி வெறும் 1.04 பில்லியன் சுவிஸ் பிராங் (ரூ,9,771 கோடி) அளவிலான தொகை மட்டுமே தற்போது இந்தியர்களின் கணக்கில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.இது கடந்த 2021-ம் ஆண்டு 3.83 பில்லியன் சுவிஸ் பிராங்காக இருந்தது. அந்தவகையில் 70 சதவீதம் அளவுக்கு குறைந்திருக்கிறது. இது 4 ஆண்டுகளில் மிகவும் குறைவான தொகை ஆகும்.அதேநேரம் 3-வது நாடு வழியாக கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள், வெளிநாடுவாழ் இந்தியர்கள் உள்ளிட்டோரின் கணக்கு விவரங்கள் இதில் சேர்க்கப்படவில்லை என சுவிஸ் தேசிய வங்கி தெரிவித்து இருக்கிறது.

சுவிட்சர்லாந்து வங்கிகளில் கடந்த 2006-ம் ஆண்டில் 6.5 பில்லியன் சுவிஸ் பிராங்க் அளவுக்கு இந்தியர்களின் பணம் இருந்ததே அதிகபட்சம் ஆகும்.அதன் பின்னர் இந்த தொகை படிப்படியாக சரிந்து வருகிறது. இடையில் ஒருசில ஆண்டுகளில் மட்டும் இந்த தொகை லேசாக அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. சுவிஸ் வங்கிகளில் தற்போது அதிக பணத்தை சேமித்திருக்கும் வெளிநாட்டினரில் இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களில் உள்ளன.இந்தியா தற்போது 67-வது இடத்தில் உள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு இது 46-வது இடத்தில் இருந்தது. இதைப்போல பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற அண்டை நாட்டினரின் இருப்பும் குறைந்திருப்பதாக சுவிஸ் வங்கி தெரிவித்து இருக்கிறது.

You may also like

© RajTamil Network – 2024