ரோகித் சர்மாவின் மிகப்பெரிய ரசிகன் நான் – 27 பந்தில் சதம் விளாசிய சஹில் சவுகான் பேட்டி

by rajtamil
0 comment 31 views
A+A-
Reset

இந்தியாவில் இருந்து எஸ்தோனியா நாட்டுக்கு சென்று கிரிக்கெட்டில் சாதித்த அனுபவத்தை சஹில் சவுகான் பகிர்ந்துள்ளார்.

மும்பை,

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான எஸ்தோனியா அணிக்காக கிரிக்கெட் விளையாடும் இந்திய வம்சாவளியை சேர்ந்த சஹில் சவுகான் சமீபத்தில் டி20 போட்டியில் குறைந்த பந்தில் சதம் அடித்து கவனத்தை ஈர்த்தார். சைப்ரஸ் அணிக்கு எதிராக களம் கண்ட அவர் 144 ரன்கள் (41 பந்து, 6 பவுண்டரி, 18 சிக்சர்) குவித்தார். இதில் 27 பந்துகளிலேயே சதத்தை பூர்த்தி செய்தார்.

இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் விளாசிய வீரர் என்ற உலக சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இதற்கு முன்பு நமிபியா வீரர் நிகோல் லாப்டி நேபாளத்துக்கு எதிராக 33 பந்துகளில் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. அத்துடன் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் நொறுக்கியவர் என்ற பெருமையையும் பெற்றார்.

சாதனை படைத்த 32 வயதான சஹில் சவுகான் அரியானா மாநிலத்தில் மனக்புர் டேவிலால் என்ற கிராமத்தை சேர்ந்தவர். அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளையாடுவதை பார்த்ததில் இருந்து நான் அவருடைய மிகப்பெரிய ரசிகன். அவர் நெருக்கடியின்றி அற்புதமாக விளையாடக் கூடியவர். எந்த சூழ்நிலையாக இருந்தாலும், எப்போதும் தனக்கே உரிய ஆட்டத்தை விளையாடுவார். அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்று இருக்கிறேன். ஹூக் ஷாட் அவரிடம் எனக்கு பிடித்தமான ஷாட்டாகும்.

நான் எஸ்தோனியாவுக்கு குடிபெயர்ந்ததுக்கு எனது மாமாதான் காரணம். அங்கு அவருக்கு ஒரு சிறிய உணவகம் உள்ளது, அங்கு தான் நான் வேலை செய்கிறேன். ஓய்வு நேரத்தில் எஸ்தோனியாவில் கிரிக்கெட் விளையாட்டு இருக்கிறதா என்று கூகுளில் தேட ஆரம்பித்தபோது, இங்கு ஒரு அணி இருப்பதை கண்டுபிடித்தேன். அவர்களிடம் தொடர்பு கொண்டு, நீங்கள் கிரிக்கெட் விளையாடுவீர்களா என்று கேட்டேன். அப்போது அவர்கள் ஆடுவோம் என்று தெரிவித்தனர்.

என்னால் இதை நம்ப முடியவில்லை. இது உண்மை தானா என்று திரும்பவும் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆமாம் என்று பதில் அளித்தனர். அப்படித்தான் நான் இங்கு விளையாட ஆரம்பித்தேன்.

நான் இந்தியாவில் இருந்த போது சிறு வயதில் இருந்தே நிறைய கிரிக்கெட் விளையாடி உள்ளேன். அதை ஒரு போதும் விட்டதில்லை. சைப்பிரசுக்கு எதிரான ஆட்டத்தின்போது எங்களது இன்னிங்ஸ் மற்றும் விரட்டிபிடிக்க வேண்டிய இலக்கு பற்றி மட்டுமே சிந்தித்து கொண்டிருந்தேன். ஏதுவான பந்துகளை விரட்டியடித்தேன். பந்து பேட்டுக்கு நன்றாக வந்தது. அதை சரியாக பயன்படுத்தி எனது ஷாட்களை விளையாடினேன்.

இவ்வாறு சஹில் சவுகான் கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024