அயோத்தி ராமர் கோவில் தலைமை பூசாரி உடல்நல குறைவால் காலமானார்

by rajtamil
0 comment 31 views
A+A-
Reset

அயோத்தி,

உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. இதற்கான கும்பாபிஷேக விழா கடந்த ஜனவரி 22-ந்தேதி நடந்தது. ராமர் கோவிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த 4 ஆயிரம் சாமியார்களுக்கு அழைப்பு விடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் வெவ்வேறு பாரம்பரியங்களை சேர்ந்த 13 அகாராக்களின் 150 துறவிகள் மற்றும் சாமியார்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள அழைப்பு விடப்பட்டு இருந்தது. இதுதவிர, 2,200 விருந்தினர்களுக்கு அழைப்பு விடப்பட்டது. காசி விஸ்வநாத், வைஷ்ணவதேவி போன்ற பெரிய கோவில்களின் தலைவர்கள், மதம் மற்றும் அரசியலமைப்பு மையங்களின் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டு இருந்தனர்.

ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவில் தலைமை பூசாரியாக ஆச்சாரியா லட்சுமிகாந்த் தீட்சித் செயல்பட்டார். அவர் உடல்நல குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 86. கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று காலமானார்.

அவருடைய மறைவுக்கு உத்தர பிரதேசத்தின் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், காசியின் சிறந்த ஒரு பண்டிதர் மற்றும் ஸ்ரீராம ஜென்மபூமியில் கும்பாபிஷேக விழாவின்போது, தலைமை பூசாரியாகவும் செயல்பட்ட ஆச்சாரியா லட்சுமிகாந்த் தீட்சித்தின் மறைவு, ஆன்மீக மற்றும் இலக்கிய உலகத்திற்கு ஈடு செய்ய முடியாத ஓர் இழப்பாகும்.

சமஸ்கிருதம் மற்றும் இந்திய கலாசாரம் ஆகியவற்றிற்கு அவர் ஆற்றிய சேவைக்காக என்றும் நினைவுகூரப்படுவார் என தெரிவித்து உள்ளார்.

அவருடைய ஆன்மா கடவுள் ஸ்ரீராமரின் பாதத்தில் இளைப்பாற ஓரிடம் தரும்படி ஸ்ரீராமரிடம் நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். அவருடைய சீடர்கள் மற்றும் அவரை பின்பற்றுபவர்களுக்கு இந்த வருத்தத்தினை தாங்கி கொள்ள வலிமை தரும்படியும் வேண்டி கொள்கிறேன் என்று ஆதித்யநாத் தெரிவித்து உள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024