Saturday, September 21, 2024

பழைய ஓய்வூதியத் திட்டம்: பரிசீலனையில் உள்ளது – அமைச்சர் தங்கம் தென்னரசு

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset

சென்னை 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான நிதி மத்திய அரசால் வழங்கப்படவில்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

சென்னை,

சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியதும் கேள்வி நேரம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நிதி, மனித வள மேலாண்மை, ஓய்வூதியங்களும் ஏனைய ஓய்வுகால நன்மைகள் துறைகளின் மானியக்கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற்றது. அப்போது நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:-

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய அமைக்கப்பட்ட குழு, ஓய்வூதிய ஒழுங்குமுறை வளர்ச்சி ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளது. இது குறித்த அரசின் கொள்கை முடிவு பரிசீலனையில் உள்ளது.

மத்திய-மாநில அரசின் திட்டத்திற்கு மத்திய அரசின் பங்களிப்பு குறைந்து கொண்டு வருகிறது. குறிப்பாக பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தில் நகரங்களில் வீடு கட்ட மத்திய அரசு ரூபாய் ஒன்றரை லட்சமும், தமிழ்நாடு அரசு ரூ.12 முதல் ரூ.14 லட்சமும் நிதி தருகிறது.

தமிழகத்திற்கான ரெயில்வே , நெடுஞ்சாலை உள்ளிட்ட உள் கட்டமைப்புத் திட்டங்களில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனத்துடன் நடந்து கொள்கிறது. தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய திட்டங்கள் எல்லாம் உத்திர பிரதேசத்திற்குச் செல்வது யாரால்? என அனைவருக்கும் தெரியும். மாநில திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்யும் போது மாநிலங்களில் உள்ள பிரச்சினைகளின் அடிப்படையில் நிதியை ஒதுக்க வேண்டும்.

சென்னை 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தால் தமிழக அரசுக்கு ரூ.12,000 கோடி அளவுக்கு நிதிச் சுமை ஏற்பட்டுள்ளது. 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான நிதி மத்திய அரசால் வழங்கப்படவில்லை. நாக்பூர், கொச்சி, புனே ஆகிய நகரங்களுக்கு 2-ம் கட்ட மெட்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியும், அனுமதியும் வழங்கியுள்ளது.

தமிழகத்துக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ.37,000 கோடி கோரப்பட்ட நிலையில், ரூ.232 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்படுகிறது. மாநில அரசுக்கான வரி பகிர்வு முறையாக வழங்கப்பட வேண்டும். மின் பகிர்மானத்திற்கு மத்திய அரசுக்கு கூடுதல் நிதி தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

#JUSTIN || “தமிழக அரசுக்கு நிதிச்சுமை”சென்னை 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தால் தமிழக அரசுக்கு நிதிச்சுமைசட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு “ரூ.12,000 கோடி அளவுக்கு நிதிச் சுமை ஏற்பட்டுள்ளது” “2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி மத்திய அரசால்… pic.twitter.com/Mb9oP2Y28c

— Thanthi TV (@ThanthiTV) June 26, 2024

You may also like

© RajTamil Network – 2024