Saturday, September 21, 2024

மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

டெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றியது. பாஜக தனித்து 240 இடங்களில் வென்றது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 234 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3வது முறையாக ஆட்சியமைத்தது.

இதனிடையே, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகராக யார் நியமிக்கப்படுவார்? என்பதில் பரபரப்பு நீடித்து வந்தது. பொதுவாக ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி இணைந்து சுமுகமாக மக்களவை சபாநாயகரை தேர்ந்தெடுப்பது வழக்கம். ஆனால், இந்த முறை பாஜக – காங்கிரஸ் இடையே சபாநாயகரை தேர்ந்தெடுப்பதில் போட்டி ஏற்பட்டது.

நாடாளுமன்ற மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லாவை நியமிக்க ஆதரவு தரவேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடம் பாஜக கோரிக்கை விடுத்தது. ஆனால், துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்கினால் சபாநாயகராக ஓம் பிர்லாவை நியமிக்க ஆதரவு தருவோம் என காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி நிபந்தனை விதித்தது. இந்த நிபந்தனையை பாஜக ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், சபாநாயகர் பதவிக்கு போட்டியிட பாஜக சார்பில் ஓம் பிர்லா வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதனை தொடர்ந்து இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குனில் சுரேஷை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தியது. இதன் மூலம் சபாநாயகர் பதவிக்கு பாஜக – காங்கிரஸ் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. தேர்தல் வாக்கெடுப்பு மூலம் சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் சூழ்நிலை உருவானது. சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்ற வரலாற்றில் சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

இந்நிலையில், சபாநாயகர் பதவிக்கான தேர்தல் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. குரல் வாக்கெடுப்பு மூலம் சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜக வேட்பாளரான ஓம் பிர்லா 297 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளரான சுரேஷ் 232 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் மக்களவை சபாநாயகர் தேர்தலில் ஓம் பிர்லா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஓம் பிர்லா 2வது முறையாக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

You may also like

© RajTamil Network – 2024