Sunday, September 22, 2024

காருக்குள் தொழிலதிபர் கழுத்தை அறுத்து படுகொலை – திடுக்கிடும் தகவல்

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

குமரி-கேரள எல்லையில் காருக்குள் தொழிலதிபர் கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்டார்.

குமரி,

குமரி மாவட்டம் களியக்காவிளை போலீஸ் நிலையம் அருகே ஒற்றாமரம் பகுதி உள்ளது. இது குமரி-கேரள எல்லையாகும். இங்குள்ள சாலையோரம் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு கேரள பதிவெண் கொண்ட ஒரு சொகுசு கார் வெகுநேரமாக நின்று கொண்டிருந்தது. அந்த கார் ஸ்டார்ட் செய்யப்பட்ட நிலையிலேயே நின்றது.

இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அந்த காரின் அருகே சென்று எட்டி பார்த்தனர். அப்போது அவர்கள் கண்ட காட்சியால் அதிர்ச்சியில் உறைந்தனர். அதாவது காருக்குள் டிரைவர் இருக்கையில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

பின்னர் சுதாரித்துக் கொண்டு இதுகுறித்து அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பிணமாக கிடந்தவரின் கழுத்து கொடூரமாக அறுக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் கழுத்தை அறுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் முடிவு செய்தனர்.

பிறகு கொலை செய்யப்பட்டவர் யார்? கொலையின் பின்னணி? தொடர்பாக விசாரணையை முடுக்கினர். இதைத் தொடா்ந்து பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காரில் இறந்தவரின் ஆதார் அட்டை மற்றும் ஓட்டுனர் உரிமம் ஆகியவை கிடந்தது.

இதனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தியதில் கொல்லப்பட்டவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பாப்பனம்கோடு கைமனம் பகுதியை சேர்ந்த சோமன் மகன் தொழிலதிபர் தீபு (வயது 44) என்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் பாப்பனம்கோடு கைமனம் பகுதிக்கு சென்று உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.

இதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. படுகொலை செய்யப்பட்ட தீபுவுக்கு வேது மோள் (40) என்ற மனைவியும், மாதவ், மானசு என்ற 2 மகன்களும் உள்ளனர். மனைவி பாலக்காடு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

தீபு திருவனந்தபுரத்தில் கல்குவாரி நடத்தி வந்தார். மேலும் ெபாக்லைன் எந்திரங்கள் வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கல்குவாரி மூடப்பட்டது. இதையடுத்து கல்குவாரியை மீண்டும் திறப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தார்.

இதற்கிடையே புதிய பொக்லைன் எந்திரம் வாங்குவதற்காக நேற்று முன்தினம் ரூ.10 லட்சம் பணத்துடன் காரில் மதுரைக்கு புறப்பட்டார். இந்தநிலையில் தான் அவர் குமரி மாவட்டத்தில் காருக்குள்ளேயே கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். ரூ.10 லட்சம் பணத்தையும் காணவில்லை. தீபு காரில் வரும் வழியில் ஒருவரை ஏற்றி வந்ததாக கூறப்படுகிறது.

அந்த நபர் தான் அவரை கொன்று விட்டு பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. இதுதொடர்பான சில தடயங்கள் போலீசாரிடம் சிக்கியுள்ளன. மேலும் இதுதொடர்பாக களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் கொலை நடந்ததா? அல்லது தொழில் போட்டியால் அவர் தீர்த்துக் கட்டப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த கொலையில் ஈடுபட்டவரை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன் தலைமையில் 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொடூரமாக கொல்லப்பட்ட தீபு கேரளாவை சேர்ந்தவர் என்பதால் கேரள போலீசாரும் இந்த வழக்கை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

காருக்குள்ளே தொழிலதிபர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் குமரி, கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

You may also like

© RajTamil Network – 2024