Friday, September 20, 2024

கோட்டா நகரில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை; நடப்பாண்டில் 12-வது சம்பவம்

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஜே.இ.இ. நுழைவு தேர்வு, நீட் நுழைவு தேர்வு போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் இங்கு வந்து தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.

இந்த சூழலில் சமீப காலமாக கோட்டா நகரில் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கோட்டா நகரில் தங்கியிருந்து நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 17 வயது மாணவர், இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது நடப்பாண்டில் கோட்டா நகரில் நடந்துள்ள 12-வது தற்கொலை சம்பவம் ஆகும்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஹிரிஷித் குமார் அகர்வால் என்ற மாணவர், கோட்டா நகரில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி, அங்குள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்துள்ளார். இன்று மதியம் 1 மணியளவில் அவரது அறை உட்புறமாக பூட்டப்பட்டு இருந்ததைக் கண்டு அருகில் உள்ளவர்கள் கதவை தட்டிப் பார்த்துள்ளனர். ஆனால் பதில் வராததால் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

போலீசார் அங்கு வந்து கதவை உடைத்து திறந்து பார்த்தபோது மாணவர் மின் விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. அவரது உடல் அழுக தொடங்கியிருப்பதாகவும், அவர் நேற்றைய தினமே தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மாணவரின் அறையில் தற்கொலை தொடர்பான குறிப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில், போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

© RajTamil Network – 2024