கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் – தமிழக அரசு

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள் குறித்து தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 229 போ் பாதிக்கப்பட்டனா். இவா்களில் 65 போ் உயிரிழந்தனர். 150 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது சேலம் அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனையில் 8 பேரும், புதுச்சோி ஜிப்மா் மருத்துவமனையில் 6 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தமிழகத்தையே பெரும் அதிா்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, ஓய்வுபெற்ற ஐகோா்ட்டு நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபா் ஆணையம் அமைக்கப்பட்டு, இச்சம்பவம் தொடா்பாக அவர் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள் குறித்து தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு மெத்தனால் பயன்படுத்தப்படுவதை தடுக்க மெத்தனால் சேமிப்பு மற்றும் விற்பனை தொடர்பாக தற்போது உள்ள விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளை ஆராய்ந்து, அதில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்தும் பரிந்துரைகளை அளிக்க வேண்டும். இது போன்ற சம்பவங்களால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்தும் பரிந்துரைகளை அளிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024