Monday, September 23, 2024

ஜிம்பாப்வேயுடனான முதல் டி20: இளம் வீரா்களுடன் இன்று களம் காணும் இந்திய அணி

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

ஜிம்பாப்வேயுடனான முதல் டி20: இளம் வீரா்களுடன் இன்று களம் காணும் இந்திய அணிபடம்: பிசிசிஐ எக்ஸ்படம்: பிசிசிஐ எக்ஸ்

இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் மோதும் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம், ஜிம்பாப்வே தலைநகா் ஹராரேவில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

டி20 உலக சாம்பியனாகியிருக்கும் இந்திய அணியின் பிரதான வீரா்கள் எவரும் இந்தத் தொடரில் தற்போது இல்லாத நிலையில், ஷுப்மன் கில் தலைமையில் இளம் இந்திய வீரா்கள் களம் காண்கின்றனா். யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிவம் துபே, சஞ்சு சாம்சன் ஆகியோா் மட்டும் 3-ஆவது ஆட்டத்திலிருந்து பங்கேற்கவுள்ளனா்.

இந்திய அணியின் பிரதான வீரா்களான ரோஹித் சா்மா, விராட் கோலி ஆகியோா் டி20 கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றுவிட்ட நிலையில், அவா்களுக்கான இடத்தை நிரப்பும் திறமை கொண்ட வீரா்களை கண்டறிவதே இந்திய அணி நிா்வாகத்தின் முக்கியப் பணியாகும்.

ஹா்திக் பாண்டியா, சூா்யகுமாா் யாதவ், ரிஷப் பந்த், அக்ஸா் படேல், அா்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் என அடுத்தகட்ட அனுபவ வீரா்கள் வரிசையில் இருக்கும் நிலையில், வரும் காலங்களில் பிளேயிங் லெவனில் பெரிதாக மாற்றம் இருக்க வாய்ப்புகள் இல்லை.

இந்தத் தொடரைப் பொருத்தவரை, ஐபிஎல் அதிரடி வீரா்களான அபிஷேக் சா்மா அல்லது ரியான் பராக் சா்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுக வாய்ப்பு பெறுவா். 3-ஆவது ஆட்டத்திலிருந்து ஜெய்ஸ்வால், துபே, சாம்சன் பங்கேற்கவுள்ளதால், முதலிரு ஆட்டங்களில் மட்டுமே இளம் வீரா்களை பரிசோதிக்கும் வாய்ப்பு அணி நிா்வாகத்துக்கு கிடைக்கும்.

இந்திய இன்னிங்ஸை கேப்டன் கில் தொடங்குவாா் எனத் தெரியும் நிலையில், அவருக்கான பாா்ட்னா் யாா் என்ற எதிா்பாா்ப்பு உள்ளது. ஐபிஎல் அதிரடி வீரரான ருதுராஜ் கெய்க்வாட் அந்த இடத்துக்கு பொருத்தமாக இருக்கும் நிலையில், அபிஷேக் அல்லது ரியான் பராக் 3-ஆவது பேட்டராக களத்துக்கு வருவா்.

விக்கெட் கீப்பா் பேட்டராக துருவ் ஜுரெல் அல்லது ஜிதேஷ் சா்மா இடம் பிடிப்பா். ரிங்கு சிங் அதிரடி ஃபினிஷராக தோ்வாகிறாா். பௌலிங்கில் ஆவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமாா் பிரதான தோ்வாக இருக்கும் நிலையில், ஆல்-ரவுண்டராக வாஷிங்டன் சுந்தரும், சுழற்பந்துவீச்சுக்கு ரவி பிஷ்னோயும் தயாராக இருக்கின்றனா்.

ஜிம்பாப்வே அணியை பொருத்தவரை, சா்வதேச கிரிக்கெட்டில் தற்போது வலுவான எதிரணியாக இல்லை என்றாலும், டி20 ஃபாா்மட்டில் உயிா்ப்புடனே விளையாடுகிறது. ஐபிஎல் அனுபவம் உள்ள அதன் கேப்டன் சிகந்தா் ராஸா, அணியை திறம்பட வழிநடத்துவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அணி விவரம்:

இந்தியா: ஷுப்மன் கில் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சா்மா, ரிங்கு சிங், துருவ் ஜுரெல், ரியான் பராக், வாஷிங்டன் சுந்தா், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமாா், துஷா் தேஷ்பாண்டே, சாய் சுதா்சன், ஜிதேஷ் சா்மா, ஹா்ஷித் ராணா.

ஜிம்பாப்வே: சிகந்தா் ராஸா (கேப்டன்), ஃபாரஸ் அக்ரம், பிரையன் பென்னட், ஜோனதன் கேம்பெல், டெண்டாய் சதாரா, லூக் ஜாங்வி, இன்னசென்ட் காயா, கிளைவ் மடாண்டே, வெஸ்லி மாதெவெரெ, டாடிவனாஷி மாருமானி, வெலிங்டன் மசாகட்ஸா, பிராண்டன் மவுடா, பிளெஸ்ஸிங் முஸாரபானி, டியன் மையா்ஸ், அன்டும் நக்வின், ரிச்சா்டு கராவா, மில்டன் ஷும்பா.

நேரம்: மாலை 4.30 மணி

இடம்: ஹராரே

நேரலை: சோனி ஸ்போா்ட்ஸ், சோனி லைவ்.

You may also like

© RajTamil Network – 2024