Monday, September 23, 2024

‘கிரிக்கெட் வீரர்களை வரவேற்க குஜராத்தில் இருந்து பேருந்தை கொண்டு வர வேண்டுமா?’ – சஞ்சய் ராவத்

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

மும்பை,

9-வது டி-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி டி-20 உலகக்கோப்பையை சொந்தமாக்கியதால் ஒட்டுமொத்த தேசமும் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தது.

இந்த வெற்றி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று வீரர்கள் மும்பையில் திறந்த பேருந்தில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். இதன் பின்னர் வான்கடே மைதானத்தில் இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த நிலையில், கிரிக்கெட் வீரர்களை வரவேற்க குஜராத்தில் இருந்து பேருந்தை கொண்டு வர வேண்டுமா? என சிவசேனா கட்சி(உத்தவ் பாலாசாகேப் தாக்கரே அணி) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"டி-20 உலகக்கோப்பையை மோடி வென்றாரா? கொண்டாட்டம் மற்றும் மகிழ்ச்சி ஏற்படும் சமயங்களில், வெற்றி பெற்றவர்களை பிரதமர் மோடி தனது இல்லத்திற்கு அழைக்கிறார். அதே சமயம், ஹத்ராஸ் மற்றும் மணிப்பூரைப் போல் நெருக்கடியும், சோகமும் ஏற்படும் இடங்களுக்கு மோடி செல்வதில்லை.

இந்திய கிரிக்கெட் அணியை சந்திக்க மோடிக்கு நேரம் உள்ளது. அவர் சந்திக்கக் கூடாது என்று நான் கூறவில்லை. ஆனால் உத்தர பிரதேசத்தில் பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத்தில் மிகப்பெரிய சோகம் நடந்துள்ளது. அவர் அங்கும் செல்ல வேண்டும். அவர் மணிப்பூருக்கும் செல்லவே இல்லை.

கிரிக்கெட் வீரர்களை வரவேற்கவும், மும்பையில் பேரணி நடத்தவும் குஜராத்தில் இருந்து மும்பைக்கு பேருந்தை கொண்டு வருவதற்கான காரணம் என்ன? எங்களிடமே இதுபோன்ற பேருந்துகள் உள்ளன. அவ்வாறு இல்லையென்றாலும் கூட, மும்பையில் ஒரே இரவில் அதனை எங்களால் தயாரித்துவிட முடியும்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

You may also like

© RajTamil Network – 2024