Monday, September 23, 2024

புனே சொகுசு கார் விபத்து: சாலை பாதுகாப்பு குறித்து கட்டுரை சமர்ப்பித்த சிறுவன்

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

மும்பை,

மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் கல்யாணி நகர் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் விஷால் அகர்வால். இவரது மகன் வேதாந்த் அகர்வால். 17 வயது சிறுவனான வேதாந்த் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதை கொண்டாட கடந்த மாதம் 18ம் தேதி இரவு நண்பர்களுடன் தனது தந்தையின் சொகுசு காரில் கல்யாணி நகரில் உள்ள கேளிக்கை விடுதிக்கு சென்றுள்ளார். அங்கு வேதாந்த் உள்பட அனைவரும் மதுகுடித்துள்ளனர்.

பார்ட்டி முடிந்தபின்னர் கடந்த மாதம் 19ம் தேதி அதிகாலை 3 மணியளவில் வேதாந்த் சொகுசு காரில் வீடு திரும்பியுள்ளார். சொகுசு காரில் 200 கிலோமீட்டர் வேகத்தில் அதிவேகமாக சென்றுள்ளார்.

கல்யாணி நகர் ஜங்சன் பகுதியில் அதிவேகமாக சென்ற கார் முன்னே சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பைக்கில் பயணித்த ஐ.டி. ஊழியர்களான அனுஷ் மற்றும் அவரது தோழி அஸ்வினி கோஷ்டா ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டு மற்றொரு காரில் விழுந்தனர். இந்த சம்பவத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.

விபத்தை ஏற்படுத்திய கார் தடுப்பு சுவரில் மோதி நின்ற நிலையில் அதை சுற்றிவளைத்த அக்கம்பக்கத்தினர் காரை ஓட்டிய சிறுவன் வேதாந்த் அகர்வாலை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து சிறுவனை கைது செய்த போலீசார் அவரை மறுநாள் காலை சிறார் தொடர்பான குற்றங்களை விசாரிக்கும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவருக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. சிறுவனுக்கு 15 மணிநேரத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் சமூகவலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, உயர் அதிகாரிகள் விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டது. இந்த விசாரணையில் சிறுவனுக்கு மருத்துவசோதனை நடத்தி மதுகுடிக்கவில்லை என போலியாக சான்றிதல் வழங்க சிறுவனின் ரத்த மாதிரிகளை மாற்றியதாக டாக்டர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், சிறுவனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டு அவர் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார்.

மேலும், வழக்கில் இருந்து சிறுவனை காப்பாற்ற விபத்தை ஏற்படுத்தியது டிரைவர்தான் என திசைதிருப்ப முயற்சி நடைபெற்றுள்ளது. சிறுவனின் தந்தை விஷால் அகர்வால், தாத்தா சுரேந்திர அகர்வால் இணைந்து கார் டிரைவரை கடத்தியுள்ளனர். பின்னர், கார் விபத்தை நடத்தியது நான் தான் என ஒப்புக்கொண்டு வழக்கை சந்திக்கும்படி கார் டிரைவரிடம் கூறியுள்ளனர். ஆனால், விபத்து பழியை ஏற்க கார் டிரைவர் மறுத்துள்ளார். இந்த சம்பவம் விசாரணையில் தெரியவந்ததையடுத்து சிறுவனின் தந்தை விஷால் அகர்வால், தாத்தா சுரேந்திர அகர்வால் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல், மருத்துவ பரிசோதனைக்கு சிறுவனின் ரத்த மாதிரி மாற்றி வைக்கப்பட்ட சம்பவத்தில் சிறுவனின் தாயார் ஷிவானி அகர்வால் கைது செய்யப்பட்டார். மேலும் சிறுவனின் தாத்தாவும் மற்றும் தந்தையும் கடந்த 2ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தனர்.

இந்நிலையில், கார் விபத்தை ஏற்படுத்திய சிறுவன் சிறார் கோர்ட்டு வழங்கிய நிபத்தனைகளுக்கு இணங்கி சாலை பாதுகாப்பு குறித்து 300 வார்த்தைகள் கொண்ட கட்டுரையை இன்று கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சிறுவனின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டது சட்டவிரோதமானது என்று மும்பை ஐகோர்ட்டு தெரிவித்ததை அடுத்து, கடந்த மாதம் சிறுவன் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024