Monday, September 23, 2024

அசாமில் கனமழை; பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

கவுகாத்தி,

அசாமில் கடந்த மாதத்தில் இருந்து மாநிலம் முழுவதும் பருவமழை பெய்து வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

இதனால், பிரம்மபுத்ரா மற்றும் அதன் கிளை நதிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதுதவிர, திகவ், ஜியா-பராலி, பேகி, குஷியாரா உள்ளிட்ட ஆறுகளிலும் வெள்ள நீர் அபாய அளவை கடந்து ஓடுகிறது. அசாமில் வெள்ள பாதிப்புக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால், வெள்ளத்தில் சிக்கி இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. இதனை அசாம் பேரிடர் மேலாண் கழகம் வெளியிட்ட செய்தி உறுதிப்படுத்துகின்றது. இவர்களில் நேற்று ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்தனர்.

இவற்றில் தூப்ரி மாவட்டம் அதிக அளவாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, கச்சார் மற்றும் தர்ராங் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.

கனமழை மற்றும் வெள்ளம் ஆகியவற்றால் உயிரிழப்புகள், உட்கட்டமைப்புகள் பாதிப்பு, சாலைகள் துண்டிக்கப்படும் சூழல், பயிர்கள் பாதிப்பு, கால்நடைகள் உயிரிழப்பு, நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வரும் நிலை ஆகியன காணப்படுகிறது.

அசாமில் ஒட்டுமொத்த அளவில் வெள்ள நிலைமை ஓரளவு மேம்பட்டபோதும், 29 மாவட்டங்களை சேர்ந்த 23.96 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவற்றில் தூப்ரி மாவட்டத்தில் அதிக அளவாக, 7,97,918 பேரும், கச்சார் மாவட்டத்தில் 1,75,231 பேரும், தர்ராங் மாவட்டத்தில் 1,63,218 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

107 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 3,535 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால், 68 ஆயிரத்து 768.5 ஹெக்டேர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 15 லட்சத்து 49 ஆயிரத்து 161 விலங்குகளும் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா கவுகாத்தியின் ஜோதி நகர் பகுதிக்கு நேற்று நேரில் சென்றார். காணாமல் போன அபினாஷ் சர்கார் என்ற குழந்தையின் பெற்றோரை சந்தித்து பேசினார். அபினாஷ், கோவில் அருகே இருந்த சாக்கடையில் விழுந்த பின் காணாமல் போன நிலையில், அவனை தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.

இதேபோன்று, வெள்ளம் பாதித்த பகுதிகளை கால்நடையாக சென்று ஹிமந்த பிஸ்வா பார்வையிட்டதுடன், குடியிருப்புவாசிகளுடன் உரையாடினார். வெள்ள நிலையை எதிர்கொள்ள வேண்டிய மற்றும் தீர்வு காண வேண்டிய விசயங்களை பற்றி நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

You may also like

© RajTamil Network – 2024