Monday, September 23, 2024

மாரத்தான் மாவீரர்கள்: நினைவில் நிற்கும் நீண்டதொலைவு ஓட்டம்!

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

மாரத்தான் மாவீரர்கள்: நினைவில் நிற்கும் நீண்டதொலைவு ஓட்டம்!உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி, இந்த மாத இறுதியில் தொடங்க இருக்கிறது.மாரத்தான் மாவீரர்கள்: நினைவில் நிற்கும் நீண்டதொலைவு ஓட்டம்!

லகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி, இந்த மாத இறுதியில் தொடங்க இருக்கிறது. இந்தமுறை ஒலிம்பிக் நடைபெறப் போகும் இடம் பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸ்.

இந்த தருணத்தில், ஒலிம்பிக்கின் ஒரு முதன்மை தடகளப் போட்டியான மாரத்தான் பற்றி பார்ப்போம்.

கி.மு.490ஆம் ஆண்டு கிரேக்க நாட்டின் மாரத்தான் பகுதியில் கிரேக்கர்களுக்கும், பாரசீகர்களுக்கும் இடையில் போர் மூண்டது. போரில் கிரேக்கர்கள் வெற்றிபெற்ற நிலையில் அந்தத் தகவலை தலைநகர் ஏதென்சுக்குத் தெரிவிக்க ஓட்டமாய் ஓடினார் ஒரு வீரர். அவரது பெயர் பெய்டிபெடிஸ். நிற்காமல் நீண்டதொலைவு ஓடி, ஏதென்ஸ் நகருக்குள் நுழைந்து வெற்றிச் செய்தியை அறிவித்து விட்டு, களைப்பு காரணமாக விழுந்து இறந்து போனார் அந்த வீரர்.

வீரர் பெய்டிபெடிஸ் பற்றி இன்னொருவிதமான கதையும் இருக்கிறது. மாரத்தான் களத்தில் போர் தொடங்கும்முன் ஸ்பார்ட்டா நகரத்தின் உதவியைக் கேட்டுத்தான் பெய்டிபெடிஸ் ஓடினார். 240 கிலோ மீட்டர் தொலைவை, 2 நாள்களில் அவர் ஓடிக் கடந்தார் என்பது மாதிரியான தகவலும் உண்டு.

எது எப்படியோ? நவீன ஒலிம்பிக் போட்டி 1896ஆம் ஆண்டு, கிரீஸ் (கிரேக்க) நாட்டின் தலைநகரமான ஏதென்ஸ் நகரத்தில் தொடங்கியபோது, அதில் பெய்டிபெடிஸ்சின் நினைவாக நீண்ட தொலைவு ஓட்டப்போட்டி ஒன்று இடம்பெற்றது. மாரத்தான் என்று அதற்குப் பெயர் சூட்டப்பட்டது.

அந்த நவீன ஒலிம்பிக் மாரத்தான் போட்டி, கி.மு.490ஆம் ஆண்டு, வீரர் பெய்டிபெடிஸ் எந்த பாதை வழியாக ஓடினாரோ, அதே பாதை வழியாக நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில், ஸ்பைரிடன் லூயி என்ற கிரேக்க வீரர் வெற்றி பெற்றார்.

வீரர் ஸ்பைரிடன் லூயி முதல் வீரராக, ஏதென்ஸ் நகரின் பனதெனெய்க் அரங்கத்துக்குள் நுழைந்தபோது அரங்கம் அதிர்ந்தது. அரங்கத்தின் உள்ளே அவர் கடைசிச்சுற்று ஓடியபோது கிரேக்க இளவரசர் ஜார்ஜ், முடிக்குரிய இளவரசர் கான்ஸ்டன்டைன் ஆகியோரும் ஆர்வ மிகுதியால் லூயியுடன் சேர்ந்து ஓடினார்கள். நவீன ஒலிம்பிக் மாரத்தான் போட்டியில் வென்ற முதல்வீரர் என்ற பெருமையைப் பெற்றார் ஸ்பைரிடன் லூயி.

குடிநீரை சுமந்து விற்பனை செய்வதுதான் ஸ்பைரிடன் லூயியின் தொழில். ஆடு மேய்ப்பராகவும், முன்னாள் ராணுவ வீரராகவும் கூட ஸ்பைரிடன் லூயி இருந்திருக்கிறார்.

ஒலிம்பிக் மாரத்தான் ஓட்டப் போட்டியில் பெற்ற வெற்றிக்காக ஸ்பைரிடன் லூயிக்குக் கிடைத்த சில பரிசுகள் வேடிக்கையானவை. ஒரு குதிரை, கூடவே ஒரு வண்டி அவருக்குப் பரிசாகக் கிடைத்தது. ‘லூயி அவரது வாழ்நாள் முழுவதும் தன்னிடம் இலவசமாக முடிவெட்டி, சவரம் செய்து கொள்ளலாம்’ என அறிவித்தார் முடிதிருத்தக உரிமையாளவர் ஒருவர்.

அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளிலும் மாரத்தான் போட்டி அழகு சேர்த்தது. ஆனால், 1904ஆம் ஆண்டு, அமெரிக்காவின் செயிண்ட் லூயிசில் நடந்த ஒலிம்பிக் போட்டி மாரத்தான் போல ஒரு போட்டி நடந்ததே இல்லை. அந்த அளவுக்குக் குழப்பம் .

இந்தப் போட்டியில் கலந்து கொள்ள கியூபா நாட்டில் இருந்து ஃபெலிக்ஸ் கார்வஜால் என்ற அஞ்சல்காரர் வந்திருந்தார். அமெரிக்காவின் நியூஆர்லியன்ஸ் நகரில் சூதாட்டத்தில் மொத்தப் பணத்தையும் பறிகொடுத்துவிட்டு, கையில் பணமில்லாமல் கால்வழியே நடந்து ஒலிம்பிக் நடக்கும் செயிண்ட் லூயிஸ் நகருக்கு வந்து சேர்ந்தார் அவர்.

ஒலிம்பிக் மாரத்தான் போட்டி இன்னும் சற்றுநேரத்தில் தொடங்க இருந்தநிலையில், கார்வஜால் அணிந்திருந்த கறுப்புநிற நீளக்கால்சட்டை ஓட்டத்துக்கு உதவாது என்று ஒருவர் ஊகித்தார். அவர் கத்திரிக்கோலை வைத்து கால்சட்டையைக் குட்டையாக்கித் தர, மாரத்தானில் களமிறங்கினார் கார்வஜால்.

செயிண்ட் லூயிஸ் மாரத்தான் போட்டி, ஏழு குன்றுகளின் மேல் நூறடி முதல் முன்னூறு அடி வரை ஏற்ற இறக்கத்துடன்கூடிய பாதையில் நடைபெற்றது. மாரத்தானில் பங்கேற்ற வீரர்கள் வழிநெடுக குறுக்கே மறுக்கே வரும் வாகனங்களைக் கடந்து ஓட வேண்டியிருந்தது. கையில் நாயைப் பிடித்தபடி நடைப்பயிற்சி வந்தவர்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்திருந்த இரண்டு கறுப்பின பழங்குடி மாரத்தான் வீரர்களில் ஒருவரை வழியில் நாய் துரத்த, அவர் இன்னும் வேகமாக ஓடினார் என்று பார்த்துக் கொள்ளுங்களேன்.

மாரத்தான் வீரர்கள் வழியில் நின்றவர்களிடம் சற்றுநேரம் நின்று பேசிவிட்டு கூட ஓடினார்கள். பழத்தோட்டங்களில் புகுந்து, பழங்களைப் பறித்துத் தின்றுவிட்டு ஓடும் வாய்ப்புகூட வீரர்களுக்கு இருந்தது.

ஃபிரெட் லோர்ஸ் என்ற அமெரிக்க வீரர் பாதிவழியில் ஓட்டத்தைக் நிறுத்திவிட்டு டாக்சியைப் பிடித்தார். ஒலிம்பிக் அரங்கத்தின் அருகே வந்து இறங்கிக் கொண்ட அவர், அரங்கத்துக்குள் நுழைந்தபோது ஒரே ஆரவாரம். லோர்ஸ் முதல் வீரராக ஓடி வருகிறார் என்று நினைத்து மக்கள் ஆரவாரிக்க, அதன்பிறகு உண்மை தெரிந்து லோர்ஸ் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

அமெரிக்காவைச் சேர்ந்த தாமஸ் ஹிக்ஸ் என்ற வீரர் பாதிவழியில் ஓட முடியாமல் தவித்த போது, ஒருவர் ஸ்ட்ரைகோனஸ் என்ற மருந்தை அவருக்குத் தந்தார். ஒலிம்பிக் வரலாற்றில் முதல் ‘ஊக்கமருந்து’ இதுதான். கூடவே முட்டையின் வெள்ளைக்கரு, மது, வெந்நீர் தரப்பட, தாமஸ் ஹிக்ஸ் அரும்பாடு பட்டு மீதத் தொலைவைக் கடந்து வெற்றிக்கோட்டைத் தொட்டார்.

அதற்கு அடுத்த 1908 லண்டன் ஒலிம்பிக் போட்டியில்தான், மாரத்தான் போட்டிக்கான நீளம் 26 மைல் 385 முழம் என வரையறை செய்யப்பட்டது. இந்தப்போட்டியில் பங்கேற்ற இத்தாலி நாட்டு வீரரான டொரண்டோ பியட்ரி ஓட விடாமல் பாதியில் மயங்கி விழுந்து, பிறகு எழுந்து ஓடி, ஊர்ந்து, நடந்து ஒருவழியாக ஒலிம்பிக் மாரத்தான் போட்டியை நிறைவு செய்தார். அவரது துணிவையும், விடாமுயற்சியையும் பாராட்டி இங்கிலாந்து அரசி அலெக்சாண்டிரியா சிறப்புத் தங்கக் கோப்பை ஒன்றைப் பரிசாக அளித்தார்.

1960ஆம் ஆண்டு இத்தாலி நாட்டின் ரோம் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்க வந்தார் ஒருவர். அவர் எத்தியோப்பியா நாட்டு வீரர். பெயர் அபே பிகிலா. அமாரிக் மொழியில் மலர்மொட்டு என்பது அவரது பெயருக்கு அர்த்தம்.

பிகிலா, எத்தியோப்பிய நாட்டு மன்னர் ஹேய்லி செலாய்சியின் மெய்க்காப்பாளர்களில் ஒருவர். மன்னரிடம் இருந்து பரிந்துரை கடிதம் ஒன்றை அவர் கொண்டு வந்திருந்தார்.

அபே பிகிலா வெறும் கால்களுடன் நிற்பதைப் பார்த்த ஒலிம்பிக் அலுவலர்கள் அவருக்கு புதைமிதிகளைத் தர முன்வந்தனர். பிகிலா அதை ஏற்கவில்லை. அதற்கு அவர் சொன்ன காரணம் வேடிக்கையானது. ‘இந்த வெப்பத்தில் பூட்ஸ்களை அணிந்து ஓடினால் கால்கள் வெந்துவிடும்()!’ என்றார் அவர்.

போட்டி தொடங்குவதற்கு முதல்நாளே மாரத்தான் ஓட்டப்போட்டிக்கான பாதையை பயிற்சியாளருடன் சேர்ந்து ஆராய்ந்தார் பிகிலா. மாரத்தான் போட்டி நிறைவடையும் இடத்துக்கு சற்றுமுன்னால் கான்ஸ்டன்டைன் வளைவு என்ற இடத்தில் அக்சம் என்ற கல்தூண் இருந்தது.

எத்தியோப்பியா, ஒருகாலத்தில் இத்தாலி நாட்டின் குடியேற்ற நாடாக இருந்தது. அப்போது எத்தியோப்பியாவின் அக்சம் பகுதியில் இருந்து எடுத்து வரப்பட்ட கல்தூண் அது. சரியாக அந்த கல்தூண் இருக்கும் பகுதிக்கு வந்ததும் தனது வேகத்தைக் கூட்டி வெற்றிக் கோட்டைத் தொட வேண்டும் என்று பிகிலா முடிவு செய்துகொண்டார்.

மறுநாள் மாரத்தான் போட்டி தொடங்கியது. ஒலிம்பிக் வரலாற்றில் இரவு நேரத்தில் நடந்த முதல் மாரத்தான் போட்டி அதுதான். ஒலிம்பிக் அரங்கத்துக்கு வெளியே தொடங்கி வெளியே முடிந்த முதல் மாரத்தான் போட்டியும் அதுதான்.

பிகிலா வெறும் கால்களுடன் ஓடத் தொடங்கினார். வழியில் அவரைப் பார்த்த பலர், ‘யார் இந்த பைத்தியக்காரன்? வெறும் கால்களுடன் ஓடுகிறான்?’ என்று நினைத்துக் கொண்டார்கள். மொராக்கோ நாட்டின் ராடிபென் அப்டெஸ்சலீம்தான் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டதால் அனைவரது கண்களும் அவர் மீதுதான் இருந்தன.

வழியெல்லாம் வெளிச்சத்துக்காக இத்தாலி நாட்டு ராணுவ வீரர்கள் தீப்பந்தங்களுடன் நிற்க மாரத்தான் தொடர்ந்தது. 18 கிலோ மீட்டர் தொலைவு வரை ராடிபென் அப்டெஸ்சலீமுடன் சேர்ந்து ஓடிய பிகிலா, அக்சம் கல்தூண் பகுதி வந்ததும் தன் வேகத்தைக் கூட்டினார். முடிவில், புதிய ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப்பதக்கத்தை பிகிலா தட்டிச் சென்றார்.

ஆனால், இந்த மகத்தான ஒலிம்பிக் வெற்றியை பிகிலா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

‘எத்தியோப்பியா மலைப்பாங்கான நாடு. அங்கே பள்ளிக்கூடம், அஞ்சல் நிலையம், மருத்துவமனை, இப்படி எங்கே செல்ல வேண்டும் என்றாலும் மக்கள் ஓடித்தான் செல்வார்கள். நீண்ட தொலைவு ஓடுவது எத்தியோப்பிய மக்களுக்கு ஒரு பெரிய வேலையே இல்லை. ஆகவே இந்த வெற்றியை நான் பெரிதாக நினைக்கவில்லை’ என்றார் பிகிலா.

ரோம் ஒலிம்பிக்கைத் தொடர்ந்து 1964ஆம் ஆண்டு நடந்த டோக்கியோ (ஜப்பான்) ஒலிம்பிக் போட்டியில் இந்தமுறை காலணிகளை அணிந்து மாரத்தான் ஓடினார் அபே பிகிலா. இந்தமுறையும் அவருக்கே வெற்றி. அடுத்தடுத்த 2 ஒலிம்பிக் போட்டிகளில் மாரத்தான் தங்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பிகிலா பெற்றார்.

ஆனால் பதக்கம் வழங்கும் நிகழ்வில் சிறு குழப்பம். எத்தியோப்பிய நாட்டு தேசிய கீதம் தெரியாத காரணத்தால், ஜப்பான் நாட்டின் தேசிய கீதத்தை இசைக்குழு வாசித்தது. இன்றைய காலகட்டத்தில் இப்படி நடந்திருந்தால் பெரிய சர்ச்சை வெடித்திருக்கும்.

அதற்கு அடுத்த 1968 மெக்சிகோ ஒலிம்பிக்கிலும் தங்கம் வெல்ல ஆவலாக இருந்தார் பிகிலா. காரணம், போட்டி நடைபெற இருந்த மெக்சிகோ நகரம், எத்தியோப்பியாவைப் போலவே மலைப்பாங்கான உயரமான இடம். எனவே மராத்தானில் மூன்றாவது தங்கம் உறுதி என பிகிலா நினைத்திருந்த வேளையில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. 1968 மெக்சிகோ ஒலிம்பிக் போட்டியில் பிகிலாவுக்குப் பதிலாக அவரது சக நாட்டு வீரரான மாமோ வோல்டே தங்கம் வென்று சாதித்தார்.

ஒலிம்பிக் மாரத்தான் வரலாற்றில் அபே பிகிலாவைப் போல மேலும் இரு வீரர்கள் இருமுறை அடுத்தடுத்து தங்கம் வென்று சாதனை புரிந்திருக்கிறார்கள். கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த வால்டெமர் சியர்பின்ஸ்கி, மாண்ட்ரியால் (1976), மாஸ்கோ (1980) போட்டிகளிலும், கென்யா நாட்டின் எலியுத் கிப்சோஜே, 2016 அட்லாண்டா, 2020 டோக்கியோ போட்டிகளிலும் அடுத்தடுத்து மாரத்தான் தங்கம் வென்று அசத்தியிருக்கிறார்கள்.

இவர்களில் எலியுத் கிப்சோஜே 2 மணி 01 நிமிடம் 09 நொடிகளில் மாரத்தான் ஓட்டத்தை நிறைவு செய்து உலக சாதனை புரிந்தவர். இந்தநிலையில், இம்மாதம் தொடங்க உள்ள பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டியிலும் எலியுத் கிப்சோஜே, மூன்றாவது முறையாக தங்கம் வென்றால் அதில் வியப்பதற்கு எதுவுமில்லை.

ஒலிம்பிக் போட்டிகளில் இறுதியாக நடக்கும் நிகழ்வு மாரத்தான் ஓட்டப் போட்டிதான். ஒலிம்பிக் போட்டியின் முடிவைக் குறிக்கும் நீண்ட தொலைவு ஓட்டப்போட்டி இது. ஆனால் ஒலிம்பிக் போட்டிகளில் மாரத்தான் ஓட்டப் போட்டி ஏற்படுத்தும் அதிர்வுகள், மிகமிக நீண்டகாலத்துக்கு நம் நினைவில் நின்று நிலைக்கக் கூடியவை.

………………….

You may also like

© RajTamil Network – 2024