ஆந்திரம்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சிறுவர்கள்மோப்பநாயின் உதவியால் சிறுவர்கள் பிடிபட்டனர்
ஆந்திரப் பிரதேசத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திரப் பிரதேசத்தின் நந்தியால் மாவட்டத்தில் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது சிறுமி, திடீரென காணாமல் போய்விட்டதாக சிறுமியின் தந்தை காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் சிறுமியைத் தேடத் தொடங்கினர். பின்னர், சிறுமியின் உடல் இறந்த நிலையில், கால்வாய் அருகே இருப்பதைக் கண்டு, சிறுமியின் பெற்றோருக்கு தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சிறுமியின் மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். ஆனால், எந்தவிதமான தகவல்களும் கிடைக்கவில்லை. இறுதியாக, மோப்பநாயை சிறுமியின் உடல் இருந்த கால்வாய் அருகே கூட்டிச் சென்றபோது, நாய் மோப்பம் பிடித்துக் கொண்டு, 3 சிறுவர்களின் வீட்டுக்குச் சென்றுள்ளது.
அந்த 3 சிறுவர்களிடமும் விசாரணை மேற்கொண்டதில், சிறுவர்கள் தான் சிறுமியைக் கொலை செய்தனர் என்பது தெரிய வந்தது.
விசாரணையில் சிறுவர்கள் கூறியதாவது, சிறுமி பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த போது, சிறுவர்கள் தங்களுடன் விளையாட வருமாறு அழைத்துள்ளனர். சிறுமியும் அவர்களுடன் சென்றபின், சிறுவர்கள் மூவரும் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை, வெளியில் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக சிறுமியைக் கொன்றதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, 3 சிறுவர்களும் கைது செய்யப்பட்டனர். சிறுவர்களில் இருவர் 12 வயதும், ஒருவர் 13 வயதும் உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.