புதுடில்லி: காலிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கனடா அரசு குற்றம்சாட்டிய நிலையில், அந்நாட்டு தூதருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பி, தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இரு நாட்டு உறவை இன்னும் மோசமாக்கும் என எச்சரித்துள்ளது.
வட அமெரிக்க நாடான கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப்சிங் நிஜ்ஜார், 2023ல் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருந்தார். இதை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால் இரு தரப்பு உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், நிஜ்ஜார் கொலை வழக்கு தொடர்பாக, அமெரிக்காவைச் சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தொடர்ந்து கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கனடாவின் தேசிய பாதுகாப்புக்கான பார்லிமென்ட் குழு விசாரணை நடத்தியது. இதில் பேசிய வெளியுறவுத் துறை இணையமைச்சர் டேவிட் மோரிசன், ”கனடாவில் உள்ள சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிராக வன்முறையைத் துாண்ட, இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டமிட்டுள்ளார். ”இது குறித்து வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார். நான் அதை உறுதி செய்தேன்,” என, குறிப்பிட்டார். இந்த விவகாரம் இரு நாட்டு உறவில் இன்னும் சிக்கலை அதிகப்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக டில்லியில் மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: இந்த விவகாரம் தொடர்பாக கனடா தூதரகத்தின் அதிகாரிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அப்போது தூதரக ரீதியிலான குறிப்பு அவரிடம் வழங்கப்பட்டது. அதில், அமித்ஷா மீது கனடா அமைச்சர் டேவிட் மாரிசன் தெரிவித்த அபத்தமான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு இந்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது என கூறப்பட்டு உள்ளது.
மாரிசனின் கருத்து மூலம், கனடா உயர் அதிகாரிகள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மீடியாக்களுக்கு வேண்டும் என்றே கசிய விட்டுள்ளது ஊர்ஜிதம் ஆகி உள்ளது. இந்தியாவை இழிவுபடுத்துவதற்கும், பிற நாடுகளில் செல்வாக்கு செலுத்துவதற்குமான ஒரு திட்டத்தில் ஆதாரமற்ற தகவல்களை மீடியாக்களுக்கு கசிய விடுகின்றனர். கனடா அரசின் அரசியல் திட்டங்களுக்காக இத்தகைய செயல்களில் அவர்கள் இவ்வாறு செயல்படுகிறார்கள் என்ற எங்களின் எண்ணம் தற்போது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் இந்தியா மற்றும் கனடா இடையிலான உறவில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
இவ்வாறு ரன்தீர் ஜெயிஸ்வால் கூறினார்.