அசாமில் ரீமால் புயல் பாதிப்புக்கு 8 பேர் பலி; பிரதமர் மோடி இழப்பீடு அறிவிப்பு

by rajtamil
0 comment 22 views
A+A-
Reset

புதுடெல்லி,

அசாமில் ரீமால் புயல் பாதிப்பால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், 11 மாவட்டங்களை சேர்ந்த 78 ஆயிரம் குழந்தைகள் உள்பட 3.50 லட்சம் பேர் பாதிப்படைந்து உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் வெள்ள நீரில் சிக்கி 2 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்து உள்ளனர் என அசாம் மாநில பேரிடர் மேலாண் கழகம் வெளியிட்ட வெள்ள அறிக்கை தெரிவிக்கின்றது. இதனால், மொத்த உயிரிழப்பு 8 ஆக உயர்ந்து உள்ளது.

அவர்களில் கச்சார் மாவட்டத்தில் ஒரு குழந்தை உள்பட 3 பேரும், ஹைலகண்டி மாவட்டத்தில் ஒரு குழந்தை உள்பட 2 பேரும் கர்பி அங்லோங் மேற்கு மாவட்டத்தில் ஒருவரும் உயிரிழந்து உள்ளது தெரிய வந்து உள்ளது. வெள்ள நீரில், 25 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட மொத்தம் 560 கிராமங்கள் மூழ்கியுள்ளன.

கொபிளி, பரக், கடகால் மற்றும் குஷியாரா உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில், தொடர் மழையால் வெள்ள நீர் அபாய அளவை கடந்து ஓடுகிறது. வெள்ளம் பாதித்த மாவட்டத்தில் உள்ள 4931 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

187 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, 68,600 பேர் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளனர். வெள்ளம் சூழ்ந்த நிலையில், 10,23,063 கால்நடைகளும் பாதிக்கப்பட்டு உள்ளன.

தேசிய மற்றும் மாநில பேரிடர் பொறுப்பு படைகளும், காவல், தீயணைப்பு மற்றும் அவசரகால சேவை பிரிவினருடன், உள்ளூர் அரசு நிர்வாகமும் இணைந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனை தொடர்ந்து, அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், திரிபுரா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் புயலால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இதேபோன்று காயமடைந்த நபர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

You may also like

© RajTamil Network – 2024