அசாமை புரட்டிப்போட்ட வெள்ளம் 2 லட்சம் பேர் பாதிப்பு

by rajtamil
0 comment 28 views
A+A-
Reset

கவுகாத்தி,

மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவான. 'ராமெல்' புயல் மேற்குவங்காளம் மற்றும் வங்காளதேசம் இடையே கடந்த 26-ந் தேதி இரவு கரையை கடந்தது.

இந்த புயல் காரணமாக மேற்குவங்காளத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் அங்கு கடும் வெள்ளப் பெருக்கு மற்றும் பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலையில் ‘ராமெல்’ புயலுக்கு பிறகும் வடகிழக்கு மாநிலங்களில் இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. அந்த வகையில் அசாம் மாநிலத்தில் கடந்த 28-ந் தேதி இரவு முதல் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள 9 மாவட்டங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இடைவிடாது கொட்டும் மழையால் மாநிலத்தில் உள்ள முக்கிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

ஊர்களுக்குள் புகுந்த வெள்ளம் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் உள்ளே சிக்கியுள்ளனர். பல இடங்களில் காட்டாற்று வெள்ளத்தில் வீடுகள், சாலைகள் உள்ளிட்டவை அடித்துச்செல்லப்பட்டன.

கடந்த 28-ந் தேதியில் இருந்து தற்போது வரை மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்ததாக தெரிவித்த அதிகாரிகள் மாநிலம் முழுவதும் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருவதாக கூறினர். மேலும் 3,238 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், 2.34 லட்சத்துக்கும் அதிகமான கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியுள்ள மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருவதாக தெரிவித்த அதிகாரிகள் இதுவரை 35 ஆயிரத்துக்கும் அதிமானோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக கூறினர்.

மாநிலத்தை புரட்டிப்போட்ட வெள்ளம் காரணமாக பல இடங்களில் சாலை மற்றும் ரெயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான பகுதிகளில் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

இதேபோல் மணிப்பூர் மாநிலத்திலும் 'ராமெல்' புயலுக்கு பிறகு இடைவிடாது பெய்து வரும் கனமழையால் அந்த மாநிலம் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. தலைநகர் இம்பால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக்கடாக காட்சியளிக்கின்றன. இம்பாலில் உள்ள கவர்னர் மாளிகைக்குள் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், அதை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அங்கு மழை, வெள்ளத்துக்கு 3 பேர் பலியான நிலையில் மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 88 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில நீர்வளம் மற்றும் நிவாரணம் மற்றும் பேரிடர் மேலாண்மை மந்திரி வாங்பவ் நியுமாய் தெரிவித்தார்.

You may also like

© RajTamil Network – 2024