சிறுவனாக இருக்கும்போது விக்கெட்டுகளை எடுக்க இதுவே ஒரே வழி என்று நினைப்பேன் – பும்ரா

by rajtamil
0 comment 44 views
A+A-
Reset

முடிவுகளைப் பற்றி கவலைப்படாமல் செயல் முறையில் கவனம் செலுத்தி கம்பேக் கொடுத்ததாக பும்ரா கூறியுள்ளார்.

நியூயார்க்,

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் 2007- க்கு பின் கோப்பையை வெல்லும் முனைப்புடன் இந்திய கிரிக்கெட் அணி களமிறங்குகிறது. கடந்த டி20 உலகக்கோப்பையை காயத்தால் தவற விட்ட ஜஸ்பிரித் பும்ரா இம்முறை இந்திய அணியின் வெற்றிக்கு வேகப்பந்து வீச்சுத் துறையின் ஆணிவேராக பார்க்கப்படுகிறார்.

தற்போது நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் பும்ரா 14 போட்டிகளில் 20 விக்கெட்களை எடுத்தார். எனவே நல்ல பார்மில் இருக்கும் அவர் இந்தியாவின் துருப்புச் சீட்டாக இருப்பார் என்று உறுதியாக சொல்லலாம்.

முன்னதாக 2022 ஜூன் மாதம் இங்கிலாந்து தொடரில் காயத்தை சந்தித்த பும்ரா 2022 ஆசிய, டி20 உலகக்கோப்பை, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்ற தொடர்களில் விளையாடவில்லை. அப்போது பும்ரா, ஐபிஎல் தொடரில் விளையாடுவார் ஆனால் நாட்டுக்காக காயமடைந்து வெளியேறி விடுவார் என்ற விமர்சனங்கள் இருந்தன.

இருப்பினும் அதையெல்லாம் கண்டு கொள்ளாத அவர் காயத்திலிருந்து குணமடைந்து 2023 உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடி இந்தியா இறுதிப்போட்டி வரை செல்வதற்கு உதவினார். அப்போதிலிருந்து பழைய பார்முக்கு வந்துள்ள அவர் விமர்சனங்களுக்கு தன்னுடைய யார்க்கர் மூலம் பதிலடி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் முடிவுகளைப் பற்றி கவலைப்படாமல் செயல் முறையில் கவனம் செலுத்தி கம்பேக் கொடுத்ததாக பும்ரா கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-“காயத்திலிருந்து கம்பேக் கொடுத்ததிலிருந்து நான் என்னுடைய ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தி முடிந்தளவுக்கு மகிழ்ச்சியுடன் விளையாட முயற்சிக்கிறேன். ஏனெனில் சில அம்சங்கள் எனது வழியில் செல்லும். சில அம்சங்கள் செல்லாது. இவை செயல்முறையின் ஒரு அங்கமாகும். எனவே நான் இந்த விளையாட்டை புரிந்துக்கொள்ள துவங்கியுள்ளேன். ஏனெனில் இந்த விளையாட்டை நான் விரும்புகிறேன். மேலும் இறுதி முடிவை பற்றி கவலைப்படாமல் நான் செயல்முறையில் கவனம் செலுத்துகிறேன்.

அந்த வகையில் நீங்கள் உங்களுடைய அழுத்தத்தை குறைத்து விளையாட்டை மகிழ்ச்சியுடன் விளையாட முடியும். வளரும்போது நான் டென்னிஸ் மற்றும் ரப்பர் பந்துகளில் நிறைய கிரிக்கெட்டை விளையாடியுள்ளேன். சிறுவனாக இருக்கும்போது விக்கெட்டுகளை எடுக்க யார்க்கர்தான் ஒரே வழி என்று நான் நினைப்பேன். ஏனெனில் தொலைக்காட்சிகளில் பார்த்து ஆர்வமடைந்த நான் வேகப்பந்து வீச்சின் ரசிகன். தொடர்ந்து யார்க்கர் பந்துகளை வீசுவதன் ரகசியம் டென்னிஸ் பந்துகளில் அதிகமாக விளையாடியதாலா என்பது எனக்கு தெரியாது. இப்போதும் அதை நான் தொடர்ந்து பயிற்சி செய்கிறேன். ஏனென்றால், நீங்கள் வளர்த்துக் கொள்ளும் ஒவ்வொரு திறமையையும், மீண்டும் மீண்டும் பயிற்சி செய்து வலுப்படுத்தி கொண்டே இருக்க வேண்டும்"என்று கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024