டி20 உலகக்கோப்பை: அந்த அணிக்கு எதிராக மட்டும் இந்தியா தோற்க கூடாது – சுரேஷ் ரெய்னா

by rajtamil
0 comment 39 views
A+A-
Reset

9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களமிறங்க உள்ளது.

புதுடெல்லி,

9-வது டி20 உலகக்கோப்பை தொடரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்துகின்றன. இன்று தொடங்கி வருகிற 29-ந் தேதி வரை நடைபெறும் இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், நியூசிலாந்து உள்பட 20 அணிகள் பங்கேற்கின்றன. இதில் அமெரிக்கா, உகாண்டா, கனடா ஆகிய குட்டி அணிகள் 20 ஓவர் உலகக் கோப்பையில் முதல்முறையாக அடியெடுத்து வைக்கின்றன.

அணிகள் ஏ, பி, சி, டி என 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய 5 அணிகள் இடம் பெற்றுள்ளன. முன்னதாக 2007 டி20 உலகக்கோப்பையை முதலும் கடைசியுமாக தோனி தலைமையில் இந்தியா வென்றது. அதன் பின் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் மகத்தான வீரர்களுடன் களமிறங்கியும் இந்தியா தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது.

எனவே இம்முறையாவது அந்த தொடர் தோல்விகளை நிறுத்தி 17 வருடங்கள் கழித்து இந்தியா கோப்பையை வெல்லுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அந்த நிலையில் இம்முறை இந்திய அணி தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்தை எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து நியூயார்க் நகரில் ஜூன் 9-ம் தேதி இந்தியா தங்களுடைய 2-வது போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

இந்நிலையில் இம்முறை கோப்பையை வெல்வதற்கு தேவையான அனைத்து அம்சங்களும் இந்திய அணியில் இருப்பதாக சுரேஷ் ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் தங்களைப் போன்ற முன்னாள் வீரர்கள் ஓய்வு பெற்றாலும் கூட பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் எப்படியாவது இந்தியா வெல்ல வேண்டும் என்ற உணர்வை கொண்டிருப்பதாகவும் ரெய்னா கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "நம்முடைய அணி நன்றாக தெரிகிறது. அவர்கள் நியூயார்க் நகரில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட உள்ளனர். ரோகித் சர்மா இந்திய அணியை நன்றாக வழி நடத்துகிறார். தன்னுடைய திட்டங்களில் சிறந்து விளங்கும் அவர் இந்திய கிரிக்கெட் அணியில் அனைவரிடமும் மரியாதையை பெற்றுள்ளார். நமக்கு நிறைய தேர்வுகள் இருக்கிறது. நம்மிடம் 2 ஆல் ரவுண்டர்கள் உள்ளனர். யுவராஜ் சிங், ஆர்பி சிங், ராகுல் டிராவிட் போன்ற நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக நிறைய விளையாடியுள்ளோம்.

நாட்டுக்காக விளையாடும் போது நீங்கள் உங்களுடைய சிறந்தவற்றை கொடுக்க வேண்டும். இம்முறை பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். நாங்கள் நிறைய போட்டிகளில் விளையாடியுள்ளோம். கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றாலும் கூட இதயத்திலிருந்து நாங்கள் ஓய்வு பெறவில்லை. எனவே இந்திய அணியின் மூவர்ணத்தை நீங்கள் பார்க்கும்போது நம்மால் முடிந்த அனைத்தையும் கொடுக்க வேண்டும் ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக மட்டும் தோற்கக் கூடாது என்ற உணர்வு ஏற்படும்" எனக் கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024