டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அச்சமின்றி விளையாட வேண்டும் – கங்குலி அறிவுறுத்தல்

by rajtamil
0 comment 29 views
A+A-
Reset

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அச்சமின்றி ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் என்று கங்குலி அறிவுறுத்தினார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவரும், முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி மும்பையில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது:-

இந்திய அணியின் பயற்சியாளராக இந்தியரே இருக்க வேண்டும் என்பதை நானும் ஆதரிக்கிறேன். எனெனில் நம் நாட்டில் திறமை வாய்ந்த மற்றும் பல அதிசயங்களை இந்திய கிரிக்கெட்டுக்கு செய்துள்ள உயர்தரமான வீரர்கள் இருக்கின்றனர். அவர்கள் அணியின் ஒரு அங்கமாக இருப்பதே சரியானதாக இருக்கும். இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு கவுதம் கம்பீர் விண்ணப்பித்து உள்ளாரா? என்பது பற்றி எனக்கு தெரியாது. அவர் விண்ணப்பித்து இருந்தால் மட்டுமே அந்த பதவி கிடைக்கும்.

இந்திய கிரிக்கெட் வாரியம் நினைத்தால் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க முடியும். ஒருவேளை அவர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து இருந்தால், அதனை அவர் விரும்பினால் அந்த பதவிக்கு மிகவும் பொருத்தமானவராக இருப்பார். இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இருந்தார். அவர் தங்கள் அணியின் வெற்றிக்காக ஆர்வத்துடனும், வேட்கையுடனும் பணியாற்றியதை நீங்கள் டி.வி.யில் பார்த்து இருப்பீர்கள். பயிற்சியாளர் பதவியை கிரிக்கெட் வாரியம் அவருக்கு கொடுக்க முடிவு செய்தால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அவர் அந்த பதவிக்கு நல்ல தேர்வாக இருப்பார் என்று நினைக்கிறேன்.

இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல் பும்ரா, சஞ்சு சாம்சன் என்று திறமையான வீரர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களால் இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தர முடியும். அதனை செய்ய அவர்கள் அச்சமின்றி ஆக்ரோஷமாக விளையாட வேண்டியது அவசியமானதாகும். கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனுடன் ஆடுவதுடன், முதல் பந்தில் இருந்து கடைசி பந்து வரை அதிரடியாக விளையாட வேண்டியது முக்கியமானதாகும். இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்புள்ளது. விராட்கோலி, ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும். கோலி ஐ.பி.எல். தொடரில் அபாரமான பார்மில் இருந்தார். அவர் ஒரு தலைசிறந்த வீரர்.

ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டு வந்த செயற்கை ஆடுகளங்களை அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டிக்கு பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவில் அமைக்கப்பட்டு இருக்கும் புதிய ஆடுகளங்கள் மற்றும் சூழ்நிலையை அறிய ஆவலாக இருக்கிறேன். செயற்கை ஆடுகளங்கள் பேட்டிங்குக்கு உகந்ததாக இருக்கும். இயற்கையான ஆடுகளங்களை போல் இதில் குறிப்பிட்ட நேரத்துக்குள் பெரிய அளவில் மாற்றும் இருக்காது. இதனால் ஆடுகளம் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

நீண்ட காலமாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக நமது சாதனைகள் மிகவும் நன்றாக இருக்கிறது. ஆனால் ஒரு நாள் போட்டியை விட 20 ஓவர் போட்டியில் பாகிஸ்தான் மிகவும் ஆபத்தான அணியாகும். ஆமதாபாத்தில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை லீக் போட்டியில் நாம் பாகிஸ்தான் அணியை எளிதாக வென்றோம். இந்திய அணி சுதந்திரமாக விளையாட வேண்டும் என்று நான் அடிக்கடி சொல்வதற்கு காரணம் ஆஸ்திரேலியாவில் நடந்த கடந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் நமது அணி அச்சமின்றி சுதந்திரமாக ஆடவில்லை. இந்த உலகக் கோப்பையில் வெற்றி, தோல்வியை பற்றி சிந்திக்காமல் ஒவ்வொரு ஆட்டத்திலும் நெருக்கடியின்றி விளையாட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024