தமிழகம் முழுவதும் தாய்ப்பால் விற்பனை குறித்து தீவிர கண்காணிப்பு – புகார் எண் அறிவிப்பு

by rajtamil
0 comment 48 views
A+A-
Reset

தாய்ப்பால் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.

சென்னை,

சென்னை மாதவரம் தபால்பெட்டி பகுதியை சேர்ந்தவர் முத்தையா. இவர் மாதவரம் கே.கே.ஆர். கார்டன் தெருவில் மருந்து கடை நடத்தி வந்தார். இவர், தன்னுடைய கடையில் 30 மில்லி லிட்டர் தாய்ப்பாலை பாட்டிலில் அடைத்து ரூ.500-க்கு விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், நேற்று முன்தினம் இவரது கடையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது, பாட்டிலில் அடைத்துவைத்து தாய்ப்பால் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். புரதச்சத்து பவுடர் விற்பதற்காக வழங்கப்பட்ட உரிமத்தை வைத்து தாய்ப்பால் விற்பனை செய்து வந்ததும் அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் தாய்ப்பால் விற்பனை குறித்து தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

எங்கெல்லாம் விதிகளுக்கு எதிராக தாய்பால் விற்பனை நடைபெற்று வருகிறது என்பது குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். தாய்ப்பால் விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் என்பதால், வேறு பொருட்கள் விற்பனை செய்வதாக கூறி தாய்ப்பால் விற்பனை செய்பவர்களின் உரிமத்தை ரத்து செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோல, சென்னையில் தாய்ப்பால் விற்பனையை கண்காணித்து நடவடிக்கை எடுக்க 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தாய்ப்பால் விற்பனை குறித்து 94440 42322 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். புகார்களை வாட்ஸ் – அப் மூலமாகவோ அல்லது குறுஞ்செய்தியாகவோ அனுப்பலாம். புகாரின் பேரில் தீவிர ஆய்வு நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024