நாங்கள் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக விளையாடினாலும்.. – அமெரிக்க கேப்டன் பேட்டி

by rajtamil
0 comment 43 views
A+A-
Reset

பாகிஸ்தான், இந்தியா உட்பட எந்த அணிக்கு எதிராக விளையாடினாலும் எங்களுடைய பயமற்ற கிரிக்கெட்டை மாற்றிக்கொள்ள மாட்டோம்.

டல்லாஸ்,

9-வது டி20 உலகக்கோப்பை தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்துகின்றன. இந்த தொடரின் முதலாவது ஆட்டத்தில் அமெரிக்கா – கனடா அணிகள் டல்லாஸ் நகரில் மோதின.

இதில் டாஸ் வென்ற அமெரிக்க அணியின் கேப்டன் மோனாங்க் படேல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த கனடா 20 ஓவர்களில் 194 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நவ்நீத் தலிவால் 61 ரன்கள் குவித்தார்.

இதனையடுத்து 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அமெரிக்கா வெறும் 17.4 ஓவர்களிலேயே இலக்கை கடந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆரோன் ஜோன்ஸ் 10 சிக்சர்கள் உட்பட 94 ரன்கள் குவித்தார்.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் அமெரிக்க கேப்டன் மோனாங்க் படேல் அளித்த பேட்டியில் கூறியதாவது, வங்காளதேசத்திற்கு எதிராக கடந்த தொடரில் நாங்கள் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது அணியின் முயற்சி. கவுஸ் – ஜோன்ஸ் ஆகியோர் சூழ்நிலைகளைச் சிறப்பாக சமாளித்து கனடாவிடம் இருந்த போட்டியை எங்கள் பக்கம் கொண்டு வந்தனர்.

நாங்கள் நன்றாக பந்து வீசியும் 10 முதல் 15 ரன்களை அதிகமாக கொடுத்து விட்டோம். அமெரிக்காவில் கிரிக்கெட்டுக்கு இவ்வளவு ரசிகர்கள் வருவதை பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்கள் தொடர்ச்சியாக எங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று நம்புகிறோம்.

அதைப் பயன்படுத்தி நாங்களும் தொடர்ந்து இப்படியே விளையாடுவோம். குறிப்பாக பாகிஸ்தான் அல்லது இந்தியா உட்பட எந்த அணிக்கு எதிராக விளையாடினாலும் எங்களுடைய பயமற்ற கிரிக்கெட்டை மாற்றிக்கொள்ள விரும்ப மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024