பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய குத்துச்சண்டை வீரர் நிஷாந்த் தேவ் தகுதி

by rajtamil
0 comment 53 views
A+A-
Reset

பாரீஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை அரியானாவைச் சேர்ந்த நிஷாந்த் தேவ் பெற்றார்.

பாங்காக்,

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான குத்துச்சண்டை தகுதி சுற்று பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 71 கிலோ எடைபிரிவின் கால்இறுதியில் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்தியாவின் நிஷாந்த் தேவ் 5-0 என்ற கணக்கில் மால்டோவாவின் வாசிலே செபோடாரியை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் அவர் ஒலிம்பிக் கோட்டாவை உறுதி செய்தார்.

பாரீஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை அரியானாவைச் சேர்ந்த 23 வயதான நிஷாந்த் தேவ் பெற்றார். ஒட்டுமொத்தத்தில் தகுதி பெற்ற 4-வது இந்தியர் ஆவார். ஏற்கனவே பெண்களில் நிகாத் ஜரீன், பிரீத்தி, லவ்லினா ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

51 கிலோ எடைபிரிவின் 3-வது சுற்றில் இந்திய வீரர் அமித் பன்ஹால் 5-0 என்ற கணக்கில் தென் கொரியாவின் கிம் இன் கியூவையும், 57 கிலோ எடைபிரிவில் இந்தியாவின் சச்சின் சிவாச் 4-1 என்ற கணக்கில் பிரான்ஸ் வீரர் சாமுவேல் கிஸ்டோஹரியையும் வீழ்த்தி கால்இறுதியை எட்டினர். இவர்கள் இருவரும் அடுத்த ஆட்டத்தில் வெற்றி கண்டால் ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்து விடுவார்கள்.

பெண்களுக்கான 60 கிலோ எடைபிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை அங்குஷிதா போரோ 2-3 என்ற கணக்கில் சுவீடனின் ஆக்னஸ் அலெக்சியஸ்சன்னிடம் வீழ்ந்து ஏமாற்றம் அளித்தார்.

You may also like

© RajTamil Network – 2024