Friday, November 8, 2024

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை: கர்நாடக உள்துறை மந்திரி

by rajtamil
0 comment 58 views
A+A-
Reset

பெங்களூர்,

கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி.யாக இருப்பவர் பிரஜ்வல் ரேவண்ணா (வயது 33). இவர் முன்னாள் மந்திரியும், ஒலேநரசிப்புரா தொகுதி எம்.எல்.ஏ.வுமான எச்.டி.ரேவண்ணாவின் மகன். பிரஜ்வல் ரேவண்ணா தற்போது நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் ஹாசன் தொகுதியில் பா.ஜனதா கூட்டணியில் ஜனதா தளம் (எஸ்) சார்பில் போட்டியிடுகிறார்.இவர் தொடர்பான சுமார் 2,900 ஆபாச வீடியோக்கள் கடந்த மாதம் சமூக வலைத்தளங்களில் பரவின. இதையடுத்து பிரஜ்வல் ரேவண்னா கடந்த 27-ந்தேதி இரவு பெங்களூருவில் இருந்து ஜெர்மனிக்கு திடீரென புறப்பட்டு சென்றார். அவர் சென்ற பிறகு இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் இந்த விவகாரம் கர்நாடகம் மட்டுமின்றி இந்திய அரசியலை உலுக்கியது. நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சிகள் இதை பெரிய ஆயுதமாக பயன்படுத்தி பா.ஜனதா கூட்டணிக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டது. இந்த விவகாரம் பா.ஜனதா கூட்டணி கட்சிகளுக்கு சற்று இக்கட்டான நிலையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் பிரஜ்வல் ரேவண்ணா சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் கருத்து தெரிவித்தனர். இந்த விவகாரம் பகிரங்கமான பிறகே ஜனதா தளம் (எஸ்) கட்சியில் இருந்து பிரஜ்வல் ரேவண்ணா இடைநீக்கம் செய்யப்பட்டார். இதற்கிடையே, ஜெர்மனியில் தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா நள்ளிரவில் நாடு திரும்பினார். அவரை விமான நிலையத்திலேயே கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதனிடையே, பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்று கர்நாடக உள்துறை மந்திரி ஜி. பரமேஸ்வரா தெரிவித்தார். மேலும் அதிகாரிகளுக்கு ரேவண்ணா ஒத்துழைத்ததாக தெரிகிறது என்றும் ஜி. பரமேஸ்வரா கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024