பெண்ணை கடத்தி சிறைவைத்த வழக்கு: பவானி ரேவண்ணா தலைமறைவு – சிறப்பு புலனாய்வு குழு போலீசார் வலைவீச்சு

by rajtamil
0 comment 56 views
A+A-
Reset

பெங்களூரு,

ஹாசன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருபவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் பல பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவுடன் ஆபாச வீடியோவில் இருந்த ஒரு பெண்ணை கடத்தி சிறை வைத்ததாக அவருடைய தந்தையும், எம்.எல்.ஏ.வுமான எச்.டி.ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்திருந்தனர்.

தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்த வழக்கில் எச்.டி.ரேவண்ணாவின் மனைவி பவானி ரேவண்ணாவுக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும் அவரை நேரில் விசாரணைக்கு ஆஜராக கூறி சிறப்பு புலனாய்வு குழு போலீசார் 2 முறை நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

ஆனால் பவானி ரேவண்ணா விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர் முன்ஜாமீன் கோரி கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் 3-வது முறையாக பவானி ரேவண்ணாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய சிறப்பு புலனாய்வு குழு போலீசார், ஜூன் 1-ந் தேதிக்குள்(நேற்று) கண்டிப்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி கெடு விதித்து இருந்தனர்.

ஆனாலும் பவானி ரேவண்ணா விசாரணைக்கு ஆஜராகவில்லை. விசாரணைக்கு ஆஜரானால் அவர் கைது செய்யப்படலாம் என்று தகவல் பரவியதால், அவர் தலைமறைவானதாக கூறப்படுகிறது. அவரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் தேடிவருகிறார்கள்.

ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புராவில் உள்ள சென்னாம்பிகா இல்லம், சிக்கமகளூரு (மாவட்டம்) டவுன் கல்யாண் நகரில் உள்ள அவரது மாமா வீடு உள்ளிட்ட இடங்களில் போலீசார் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. கடந்த 15 நாட்களுக்கு முன்பாகவே அவர் தலைமறைவாகி விட்டார் என்று சொல்லப்படுகிறது. தொடர்ந்து அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று காலையில் ஒலேநரசிப்புராவில் உள்ள சென்னாம்பிகா இல்லத்திற்கு சென்ற சிறப்பு புலனாய்வு குழுவினர் சுமார் 2 மணி நேரம் அங்கு காத்திருந்தனர்.

இதுபற்றி அறிந்த பவானி ரேவண்ணாவின் 3 பெண் வக்கீல்கள் அங்கு வந்து சிறப்பு புலனாய்வு குழு போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பவானி ரேவண்ணாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அவரை ஒலேநரசிப்புராவில் உள்ள சென்னாம்பிகா வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும், வேறு எங்கும் செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் நேற்று சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அங்கு சென்றபோது, பவானி ரேவண்ணா அங்கு இல்லை. ஆனால் அவரது கார் மட்டும் அங்கேயே இருந்தது. அதுபோல் பிரஜ்வல் ரேவண்ணாவின் காரும் அங்கே தான் இருந்தது.

You may also like

© RajTamil Network – 2024