விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி 3-வது நாளாக இன்று தியானம்

by rajtamil
0 comment 39 views
A+A-
Reset

தியானத்தின் நிறைவாக 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்த தனிப்படகில் பிரதமர் மோடி செல்கிறார்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் பிரதமர் மோடி சூரிய வழிபாடு நடத்தினார். விவேகானந்தர் மண்டபத்தில் 3-வது நாளாக இன்று தியானம் செய்கிறார்.

பிரதமர் மோடி நேற்றுமுன்தினம் நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதிகட்ட பிரசாரத்தை முடித்துக்கொண்டு கன்னியாகுமரி வந்து சேர்ந்தார். பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு மாலையில் விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தை தொடங்கிய அவர் அதிகாலை 5.30 மணி வரை மொத்தம் 11 மணி நேரம் தியானத்திலேயே இருந்தார். தியானத்தின்போது காவி வேட்டி, காவி சட்டை, காவி துண்டுக்கு மாறினார். நெற்றியில் திருநீற்று பட்டையுடன், சந்தனம்-குங்குமம் அணிந்திருந்தார். ருத்ராட்ச மாலையை கையில் வைத்து கண்களை மூடி வேத மந்திரங்களை கூறியபடி தியானம் செய்தார். மண்டபத்தில் ஓம் என்ற ஒலி தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது.

பிரதமர் மோடி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு தியானத்தை முடித்தபடி வெளியே வந்தார். 5.55 மணிக்கு சூரிய உதயத்தை விவேகானந்தர் மண்டபத்தில் இருந்தபடி கண்டுகளித்தார். அப்போது சூரிய வழிபாடு செய்த அவர் மீண்டும் மண்டபத்தை வலம் வந்தார். அந்த சமயத்தில் ஸ்ரீ பாதம் மண்டபத்திலும், சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்திலும் சிறிது நேரம் அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்தார்.

அதை தொடர்ந்து காலை 7.25 மணிக்கு மீண்டும் தியான மண்டபத்துக்குள் சென்று 2-வது நாள் தியானத்தை தொடர்ந்தார். விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபட்டாலும், சுற்றுலா பயணிகள் படகு மூலம் அங்கு சென்று வர கடும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் பிரதமர் மோடி இருந்த தியான மண்டப பகுதியில் செல்ல யாருக்கும் அனுமதி அளிக்க வில்லை.

அங்கு பிரதமரின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள், கமாண்டோ படையினர், தமிழக போலீசார், துணை ராணுவத்தினர் ஆகியோர் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இந்திய கடற்படையின் ஹெலிகாப்டர் ஒன்று குமரி மாவட்ட கடல் பகுதியை அடிக்கடி சுற்றி வந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. 3-வது நாளாக இன்று (சனிக்கிழமை) பிரதமர் மோடி தியானம் மேற்கொள்ள இருக்கிறார். பிற்பகலில் தியானத்தின் நிறைவாக 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்த தனிப்படகில் பிரதமர் மோடி செல்கிறார். அதன்பிறகு திருவனந்தபுரம் வழியாக டெல்லி திரும்புகிறார்.

விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டு வருவதையொட்டி கடலிலும், கடற்கரையிலும், வானிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பு பணியில் பாதுகாப்பு பிரிவினர், கமாண்டோ படையினர், இந்திய கப்பல் படையினர், இந்திய கடலோர காவல் படையினர், தமிழக கடலோர காவல் படை, தமிழக போலீசார் ஆகியோர் ஈடுபட்டு வருகிறார்கள்.

You may also like

© RajTamil Network – 2024