ஃபார்முலா 4 இரவு நேர சாலை கார் பந்தயம்: அமைச்சர் உதயநிதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

ஃபார்முலா 4 இரவு நேர சாலை கார் பந்தயம்: அமைச்சர் உதயநிதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

சென்னை: தெற்கு ஆசியாவில் முதல் முறையாக சென்னையில் ஃபார்முலா 4 இரவு நேர சாலை கார் பந்தயம் நேற்று தொடங்கியது. அமைச்சர் உதயநிதி போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டி இன்றும் நடக்கிறது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் நேற்று தீவுத்திடல் பகுதியில் பயிற்சிசுற்றுகளுடன் தொடங்கியது. தெற்கு ஆசியாவில் முதன்முறையாக நடத்தப்படும் இரவு நேர சாலை ஃபார்முலா 4 கார் பந்தயம் இதுவாகும்.

இந்த பந்தயத்துக்காக 3.5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட சர்க்யூட் தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர்பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் அண்ணா சாலை ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ளது. இது தெற்கு ஆசியாவிலேயே மிக நீளமான சாலை சர்க்யூட் என்பது குறிப்பிடத்தக்கது.

கார் பந்தய பயிற்சியை பிற்பகல் 2.45 மணி அளவில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று முன்தினம் இரவு பெய்த மழை காரணமாக தொழில்நுட்ப ரீதியாக திட்டமிட்டபடி பயிற்சி பந்தயங்களை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இதுஒருபுறம் இருக்க சர்வதேச மோட்டார் கூட்டமைப்பு (எஃப்ஐஏ), சென்னை பந்தயத்துக்கான அனுமதி சான்றிதழை வழங்குவதில் சுணக்கம் காட்டியது. இதற்கு நேற்றுமுன்தினம் இரவு பெய்த மழை காரணமாக கூறப்பட்டது. எஃப்ஐஏ வழங்கும் அனுமதி சான்றிதழை, போட்டிஅமைப்பாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பிறகே பந்தயத்தை நடத்த முடியும்.

இதனால் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. நீதிமன்றம் தரப்பில் இரு முறை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் மாலையில் 5.30 மணி அளவில் போட்டியை நடத்துவதற்கான சான்றிதழை எஃப்ஐஏ வழங்கியது. இதைத் தொடர்ந்து இரவு 7 மணி அளவில் ஃபார்முலா 4 கார்பந்தயத்தின் பயிற்சியை அமைச்சர் உதயநிதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பயிற்சியில் சுமார் 10 கார்கள் மின்னல் வேகத்தில் பறந்தன. சுமார் 200 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் சென்ற இந்த கார்களை பார்வையாளர்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர். முன்னதாக சாகசகார் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் இரு கார்கள் இரு பக்கவாட்டு சக்கரங்கள் மட்டுமே தரையில் இருந்தபடி அதிவேகத்தில் சென்றதை கண்டு ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

ஞாயிற்றுக்கிழமையான இன்று பிரதான பந்தயம் நடைபெறுகிறது. இதில் ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப், இந்தியன் ரேசிங் லீக் (ஐஆர்எல்) பந்தயம், ஜேகே டயர் ஜூனியர் தேசிய போட்டி ஆகியவை நடைபெறுகிறது. பிற்பகலில் தொடங்கும் பிரதான பந்தயங்கள் இரவு 10.30 மணிக்கு நிறைவடைகிறது.

ஃபார்முலா 4 கார் இந்தியன் சாம்பியன்ஷிப் பந்தயம் தனி நபராகவும், இந்தியன் ரேசிங் லீக் அணியாகவும் நடத்தப்படுகிறது. ஃபார்முலா 4 பந்தயத்தில் சென்னை டர்போ ரைடர்ஸ், கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங், ஸ்பீடு டெமான்ஸ் டெல்லி, பெங்களூரு ஸ்டெஸ்டர்ஸ், ஷ்ராச்சி ராஹ் பெங்கால் டைகர்ஸ், ஹைதராபாத் பிளாக்பேர்ட்ஸ், அகமதாபாத் ரேசர்ஸ், காட்ஸ்பீடு கொச்சி ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒரு அணிக்கு 2 வீரர்கள் வீதம் 16 பேர் கலந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு அணியிலும் 2 கார்கள் பயன்படுத்தப்படும்.

இந்தியன் ரேசிங் லீக் பந்தயத்தில் (ஐஆர்எல்) 6 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒரு அணியில் 4 பேர் இடம் பெறுவார்கள். அந்த வகையில் 18 வீரர்கள், 6 வீராங்கனைகள் என மொத்தம் 24 பேர் கலந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு அணியும் 2 கார்கள் வீதம் 12 கார்களை பயன்படுத்தும்.

சென்னை டர்போ அணியில் இந்திய வீரர்களான சந்தீப் குமார், முகமது ரியான்,இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் லான்கேஸ்டர், வெளிநாட்டைச் சேர்ந்த வீராங்கனை எமிலி இடம் பெற்றுள்ளனர். போர்ச்சுகல், செக் குடியரசு, பெல்ஜியம், டென்மார்க், சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், மலேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களும், வீராங்கனைகளும் கலந்து கொள்கிறார்கள்.

இந்த போட்டியின் முதல் சுற்று கடந்த 24 மற்றும் 25-ம் தேதிகளில் சென்னையை அடுத்த இருங்காட்டு கோட்டையில் நடைபெற்றது. தற்போது சென்னையில் நாளை நடைபெறுவது 2-வது சுற்று போட்டியாகும். 3-வது சுற்று போட்டி கோவையில் வரும் 13 முதல் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. 4-வது மற்றும் 5-வது சுற்றுகள் அக்டோபர், நவம்பரில் கோவா, கொல்கத்தாவில் நடத்தப்படுகிறது.

Related posts

குஜராத்: தமிழக பக்தர்கள் 55 பேருடன் சென்ற சொகுசு பஸ் வெள்ளத்தில் சிக்கியது

வெள்ளத்தில் மூழ்கிய கார்: 2 மணி நேரம் சிக்கி தவித்த தம்பதி – வைரல் வீடியோ

தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு உத்தரவு