“ஃபார்முலா 4 கார் பந்தய செலவை சாலைகளை சீரமைக்க பயன்படுத்தினால் மக்கள் பயனடைவர்” – ஜி.கே.வாசன்

“ஃபார்முலா 4 கார் பந்தய செலவை சாலைகளை சீரமைக்க பயன்படுத்தினால் மக்கள் பயனடைவர்” – ஜி.கே.வாசன்

சென்னை: “ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்காக செலவிடப்படும் கோடிக்கணக்கான ரூபாயை சென்னையில் உள்ள சாலைகளுக்கு செலவு செய்தால் விபத்துகள் குறைந்து மக்கள் பலனடைவார்கள்.” என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (ஆக.10) நடைபெற்றது. 2024 – 2027-ம் ஆண்டுகளுக்கான புதிய உறுப்பினர் படிவத்தில் முதல் நபராக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கையெழுத்திட்டு உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டுக்கள். தமிழக அரசு மக்கள் மீது தொடர் சுமையை ஏற்றியதால் மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த சுமையை குறைக்க அரசு பரிசீலிக்க வேண்டும்.

மின் கட்டண உயர்வைக் கண்டித்து நாங்கள் போராட்டம் நடத்தினோம். தமிழக மீனவர் பிரச்சினைக்கு முழுமையாக தீர்வு காண வேண்டும். மீனவர்கள் மீது அக்கறை கொண்ட அரசாகவே மத்திய அரசு செயல்படுகிறது. இலங்கையின் அட்டூழியங்களை முடிவுக்கு கொண்டுவர மத்திய வெளியுறவுத் துறை இலங்கை அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். தனியார் பள்ளிகள் மீது வெடிகுண்டு அச்சுறுத்தல் தொடராமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது. சட்டம் – ஒழுங்கு பிரச்சினையில் அரசு சமரசம் செய்துகொள்ளக்கூடாது.

அண்மைக் காலமாகவே அரசியல் கட்சியினரை குறிவைத்து பழிவாங்கும் நோக்கத்தோடு கொலைகள் நடக்கின்றன.டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். கடைகளை படிப்படியாக மூடும் நிலையையும் உருவாக்க வேண்டும். போதைப்பொருள் கலாச்சாரத்தை 100 சதவீதம் கட்டுப்படுத்த வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினியை நிறுத்தியிருப்பது மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்களது பொருளாதார பிரச்சினையைக் கருத்தில் கொண்டு இத்திட்டத்தை தமிழக அரசு தொடர வேண்டும்.

வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை ஆய்வு செய்ய 31 பேர் கொண்ட கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஏழை, எளிய, நடுத்தர இஸ்லாமிய மக்களுக்கான உதவிகளை உறுதிப்படுத்தும் வகையில் தமாகா செயல்படும். வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா பற்றி எதிர்க்கட்சிகள் தவறாக கூறுவது ஏற்புடையது அல்ல. வக்பு வாரியத்தின் வளர்ச்சிக்காகவே சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்காக செலவு செய்யும் கோடிக் கணக்கான பணத்தை சென்னையில் மாநகராட்சியில் உள்ள குண்டும் குழியுமான சாலைகளுக்கு செலவு செய்தால் விபத்துகள் குறையும். மக்களும் குறித்த நேரத்தில் அலுவலகங்கள் மற்றும் இதர பணிகளுக்கும் செல்வர். திமுகவுக்கு வாக்களித்தவர்கள் அரசிடம் கார் பந்தயத்தை கேட்கவில்லை. சென்னையில் உள்ள 99.9‌ சதவீதம் பேரால் ஃபார்முலா கார் பந்தயத்தை பார்க்க இயலாது. அதற்கான வசதியும் நேரமும் அவர்களிடம் இல்லை” என்று அவர் கூறினார்.

Related posts

விழுப்புரம்- திருச்சி பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம்

ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை குற்றப் பரம்பரையாக சித்தரிப்பதா? நடிகை கஸ்தூரிக்கு ஆ.ராசா கண்டனம்

‘2கே லவ் ஸ்டோரி’ படத்தின் டீசர் குறித்த அப்டேட்